Friday, July 29, 2016

சிவமயம்
மணிமேகலையில் சைவம்
சி. சு. மணி, பி..,
பாளையங்கோட்டை

[சிவஞான பூஜா மலர்துந்துபி ஆண்டு - (1982)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
                தமிழ்க் காப்பியங்களில் மிகச்சிறந்ததான சிலப்பதிகாரத்தை ஒட்டித் தோன்றியது மணிமேகலை. ‘மணிமேகலை மேல் உரைப் பொருள் முற்றிய சிலப்பதிகாரம்என்ற சிலப்பதிகார நூற்கட்டுரையின் வரிகளே இந்தக் கருத்தை வலியுறுத்தும். இலக்கிய அறிஞர்களும் இரண்டு நூற்களையும் சேர்த்து இரட்டைக் காப்பியங்கள்என்று குறிப்பிடும் வழக்கும் உண்டு. சிலப்பதிகாரத்தில் காணக் கிடைக்கும் சொற்றொடர்கள் மட்டுமன்றி உவமைகளும், வழக்காறுகளும் அவ்வாறே மணிமேகலையிலும் ஆளப்பட்டிருப்பது இவற்றிடையே உள்ள நெருங்கிய தொடர்பை உறுதிப்படுத்தும்.
      சங்க இலக்கியங்களில் மிகப் பெரும்பாலானவை தனிப் பாடல்கள். சுருங்கிய அளவிலே உடையவை. பத்துப் பாட்டு நூற்கள் மட்டிலுமே நீண்ட அமைப்பினைக் கொண்டவை. சங்க மருவிய காலத்தில் தோன்றியனவாகக் கருதப்படும் சிலம்பும், மணிமேகலையுமே தமிழில் தோன்றிய தொடர்நிலைச் செய்யுள்களுள் காலத்தால் முற்பட்டவை என்று கொள்ளுதற்கு இடமுண்டு.
      சிலப்பதிகாரம் தனது இனிய கதைப் போக்கினாலும், காப்பியப் பண்புகளினாலும் கவிதைச் சிறப்பினாலும் மக்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்று விளங்குகிறது. மணிமேகலை அத்தகைய புகழையும், பெருவழக்கையும் பெறவில்லை. ஆனாலும் சில இலக்கிய அன்பர்கள் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையே ஊன்றிப் பயில்வதற்குரிய நூல் என்ற கருத்தினை வலியுறுத்தி வருகிறார்கள்.
      மணிமேகலை புத்த சமயக் கருத்துக்களை வலியுறுத்துவதற்கும், விரித்துரைப்பதற்கும் எழுந்த நூல். ஆனால், புத்த சமயக் கருத்துக்களை மட்டும் கூறி அமைந்து விடாமல் அந்தக் காலத்தில் வழக்கிலிருந்த சமயக் கொள்கைகள் பலவற்றை அடையாளம் காட்டுவதாகவும் அது விளங்குகிறது.
      தத்துவக் கருத்துகளைத் தமிழில் முதல் முதலாக வகைப்படுத்திக் காட்டிய பெருமை மணிமேகலைக்கு உண்டு என்று கூறுவது மிகையாகாது. மணிமேகலை, புகார் நகரினின்றும் நீங்கி வஞ்சி மாநகருக்கு வருகிறாள். அங்குக் கண்ணகித் தெய்வம் தோன்றித் தன் வரலாறு உரைக்கக் கேட்கிறாள். “பல்வேறு சமயத்துவர் கூறும் அறநெறி யாவையும் கேட்டுத் தெளிந்து புத்த பகவானின் பிடக நெறியில் வழுவாது நின்று அறம் பேணுவாயாக!” என்று கண்ணகி, மணிமேகலைக்குக் கட்டளையிடுகிறாள். மணிமேகலை இளம் பருவத்து அழகிய பெண்ணாதலால் சமயக் கணக்கர் அவளை எள்ளி, அவளோடு உரையாடுதலைத் தவிர்த்தல் கூடும். ஆதலால், அவள் வேற்றுருக் கொண்டு அவர்களை அடைதல் வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறாள்.
      அவ்வாறே, மணிமேகலையும் தனக்கு மணிமேகலா தெய்வம் அளித்த மந்திரத்தின் வலிமையினால் ஒரு மாதவன் வடிவத்தை அடைந்து, வஞ்சி நகரில் வாழ்ந்த சமயக் கணக்கர்களை அடைந்து அவ்வவர் சமயக் கருத்துகளை அவரவக் கூறக் கேட்கின்றனர்.
      மணிமேகலை நூலில் இருபதேழாவது காதையாக அமைந்துள்ள, சமயக் கணக்கர் தம் திறங்கேட்ட காதையிலே இவ்வாறு பல்வேறு சமயங்களின் கொள்கைகளும் எடுத்தியம்பப்டுகின்றன. இந்தப் பகுதியில் எடுத்துரைக்கப்பட்ட அளவை வாதி, சைவவாதி, பிரமவாதி, வைணவவாதி, வேதவாதி, ஆசிவக வாதி, நிகண்டவாதி, சாங்கிய வாதி, வைசேடிக வாதி, பூதவாதி, ஆகியோரின் கருத்துக்கள், ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரின் காலத்திலிருந்த சமயக் கருத்துக்களை ஓரளவு அறிந்து கொள்ள உதவுகின்றன.
      நூலின் நோக்கம் புத்தசமயக் கருத்துகளை வலியுறுத்துவதுதான் எனினும், பிற கருத்துகளையும் அறிந்து தம் நூலில் பொதித்து வைத்த ஆசிரியர் தம் பாராட்டுக்கு உரியவரே. பொதுவாக பரபக்கம் கூறிப் பின் அதனை அடைவே மறுத்துச் சுபக்கம் கூறித் தன் கோள் நிறுவும் அமைப்பு இந்நூலில் பின்பற்றப்படவில்லை. பரபக்கம் கூறும் பகுதி சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதையில் அமைந்துள்ளது. அதனையடுத்து ஒரு காதை கதைப் போக்கில் நடந்து முடிகிறது. அதற்கும் பின்னர் வருகிற இருபத்தொன்பதாவது காதையாகிய “தவத்திறம் பூண்டு தருமங்கேட்ட காதை”யில் தான் சமயக் கருத்துக்கள் தொகுத்துரைக்கப் படுகின்றன. ஆசிரியர் இவ்வாறு அமைந்துள்ளதன் நோக்கம் நமக்கு நன்கு புலனாகின்றது. காப்பிய ஓட்டத்தில் தடையேதும் இன்றித் தம் கருத்தை வலியுறுத்த இதை ஓர் உத்தியாகக் கையாளுகிறார். முதன் முதலாக எடுத்துரைக்கப் படுகின்றது. அளவை வாதியின் கொள்கை. இந்தப் பகுதி ஏறத்தாழ எண்பத்தைந்து வரிகளைக் கொண்டதாக அமைகிறது.
      இதனை யடுத்து, சைவ வாதியின் சமயக் கொள்கை விளக்கப் படுகின்றது.
                                “…………………………………………………..இறைவன் ஈசனென
            நின்ற சைவ வாதிநேர் படுதலும்
            பரசுநின் தெய்வம் எப்படித் தென்ன
            இருசுட ரோடுஇய மானன் ஐம்பூதமென்று
            எட்டு வகையும் உயிரும் யாக்கையுமாய்க்
            கட்டி நிற்போனும் கலை உருவினோனும்
            படைத்து, விளையாடும் பண்பி னோனும்
            துடைத்துத் துயர்தீர் தோற்றத் தோனும்
            தன்னில் வேறு தானோன்று இலோனும்
            அன்னோன் இறைவ னாகும்என்று உரைத்தனன்”

என்ற பகுதி சைவ வாதியின் சமயக் கொள்கையை விளக்குவதாகும்.
      ‘முப்பொருளின் ஈரியல்பும் முறை திறம்பா வகை’ கூறுவதே சைவ சித்தாந்தம் என்பர் பெரியோர். ‘மணிமேகலை’யில் முப்பொருள்களுள் ஒன்றான இறைவனைப் பற்றி மட்டுமே கூறப்பட்டுள்ளது. மற்றை இரு பொருள்களைப் பற்றிய விளக்கம் இங்கே இல்லை. தலைமை பற்றிப் பதிப் பொருள் ஒன்றை மட்டும் கூறினார் என்று இதற்கு அமைதி கூறலாம். இவ்வளவு சுருக்கிக் கூறுமிடத்தும் சைவசமயத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் யாவற்றையும் முரண்இன்றிக் கூறுவது மகிழ்தற்குரியது. ஐம்பூதங்களும், இரு சுடரும் இயமானனும் இறைவனுக்கு உபசாரத் திருமேனியாகக் கூறப்படுவதை இந்தப் பகுதி தெரிவிக்கிறது. ‘உயிரும் யாக்கையுமாய்’ என்ற செய்யுட் பகுதியை, ‘யாக்கையும் உயிருமாய்’ என்று மாற்றிப்பொருள் கொள்ளுதல் வேண்டும். செய்யுளாதலின் ஆசிரியர் இவ்வாறு முறை பிறழ வைத்தார். இந்தப் பகுதி அப்பரடிகளின் “இரு நிலனாய்த் தீயாகி” என்று தொடங்கும் திருத்தாண்டகத்தோடு ஒப்பு நோக்கி இன்புறற் பாலது. அட்ட மூர்த்தம் பற்றிப் பேசும் திருமுறைப் பகுதிகளை எதிரொலிப்பது போல் இது அமைந்துள்ளது.
      “படைத்து விளையாடும் பண்பினோன்” “துடைத்துத்துயர் தீர் தோற்றத்தோன்” என்ற இரு சொற்றொடர்களால் இறைவனது ஐந்தொழில்களும் தொகுத்து உரைக்கப் படுகின்றன. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற இறைவனது ஐந்தொழில்களையும், படைத்தல், காத்தல், அழித்தல் என்று மூன்றாகச் சொல்வது பெரும்பான்மை வழக்கு. இவற்றையும் தொகுத்து இரண்டாக்கிக் கூறும் மரபும் உண்டு. “பந்தம் வீடு தரும் பரமன்” என்று சேக்கிழார் பெருமானும், “பந்தமுமாய் வீடுமாயினார்க்கு” என்று மாணிக்கவாசகப் பெருந்தகையும் கூறுவர். கட்டிற் பிணிப்பித்தும், முற்றும் விடுவித்தும் உயிர்களுக்கு அருள் புரிவது இறைவனது கருணைத்திறம். இவ்வாறு செய்வது வரம்பில்லா ஆற்றல் உடைய அவனுக்கு அலகிலா விளையாட்டு. அந்த விளையாட்டு உலகிலுள்ள உயிர்கள் மேல் அவன் கொண்ட கருணையினால் உயிர்களின் பொருட்டே நிகழ்கிறது என்ற சைவ சித்தாந்த உண்மையை உட்கொண்டே இந்த இரண்டு வரிகளும் எழுதப் பெற்றுள்ளன.
      ‘தன்னில் வேறு தானொன்று இல்லேன்; என்ற வரியில் சிவபெருமான் ஒப்புடையன் அல்லன் ஒர் உவமன் இல்லி என்ற கருத்து எடுத்துரைக்கப் படுகிறது. “சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்”, “மற்றாரும் நன்னொப்பார் இல்லாதான்” என்ற அப்பரடிகளின் அறைகூவல் இவ்வாறு மணிமேகலையில் இடம் பெறுகிறது என்றால் அது மிகையன்று.
      சைவத்தைப் பற்றிய விரிந்த கருத்துகள் எடுத்துரைக்கப்படாவிடினும் சுருங்கிய சொற்களால் சைவத்தின் கண்ணனைய அடிப்படைகள் மணிமேகலையில் கூறப்பட்டுள்ளன. புத்த சமயத்தைச் சார்ந்த ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார் சமயக் காழ்ப்பின்றிச் சைவத்தின் கொள்கைகளை வரைந்துள்ளார். பல்வேறு சமயங்களைத் தொகுத்துக் காட்டும் ‘சர்வ தரிசன சங்கிரகம்’ போன்ற ஒரு காதையைத் தம் நூலில் முதன் முதலில் தமிழில் வழங்கிய பெருமை சீத்தலைச் சாத்தானாரைச் சேரும். பண்டைப் பழங்காலத் தொட்டு மாறுபாடில்லாத உயர்ந்த கொள்கைகளைக் கொண்டது சைவ சமயம் என்ற உண்மையும் இந்நூலிருந்து புலனாகிறது.
சிவம்.



No comments:

Post a Comment