Thursday, July 28, 2016

சிவமயம்
நினைவருங் காட்சி
சைவமாமணி வித்துவான் பொன். முருகையன்
திருப்பனந்தாள்

[சிவஞான பூஜா மலர்துந்துபி ஆண்டு - (1982)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
                இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்
      இவனி றைவன் என்றெழுதிக் காட்டொணாதே

என்பது அருள்வாக்கு. இன்ன நிறம், உருவுடையவன் இறைவன் என்று வரையறுக்க முடியாவிட்டாலும் இறைவன் திருவடியில் பற்றுக்கொண்டு நினூம், இருந்தும், கிடந்தும், நடந்தும் அவன் திருவருள் கலப்பில் ஆழ்கின்ற அன்பர்கள் தங்கள் மனம் கொண்ட வடிவத்தை, உருவை, நிறத்தை எண்ணித் தம் திருவாக்கினால் உரைத்து அவ்வுருவை இறைவனாய் பாவித்துப் பரவிப் போற்றியுள்ளனர். குரு, லிங்க சங்கம வழிபாட்டு நெறியென்பது இவற்றுள் ஒன்றே இறைவன் ஒருவன். அவன் எண்ணில் ஆற்றல் உடையவன். காலங்கடந்து அநாதியானவன் என்னும் மெய்ப்பொருளில் யாருக்கும் இரண்டு கருத்துக்கள் கிடையாது. இறைவனைக் கண்டு தொழுத நோக்கில் சில அமைப்புக்கள் உண்டு. இறைவனை, உலக முதல்வனை, தனி முதன்மையோனாக வழிபடுதலும் அவனை அம்மையப்பனாய்மாதொரு பாதியனாய் வழிபடுதலும் வழிவழி வந்த மரபு நெறியே. எவ்வாறு வணங்கினும் இறைவன் அருள்புரிவன். எனினும் அம்மையோடப்பனாய், ஏழை பங்காளனாய் இன்புடன் வீற்றிருக்கின்ற எம்பெருமானைக் கண்டு காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதியது அருளாளார்களின் பததிமை உள்ளம். அது கனிந்த போதெல்லாம் உவந்துவந்து ஓராயிரம் கவி பாடினர். அர்த்தநாரீசுவரத் திருக்கோலத்தை ஞான நூல்கள் பலபடப் போற்றிப் பாடும்.
      சங்க நூலான புறநானூற்றின் கடவுள் வாழ்த்து அம்மையப்பர் திருக்கோலத்தை,
                பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று அவ்வுரு
      தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்
என்றும்,
      ஐங்குறு நூற்றுக் கடவுள் வாழ்த்து அவ்வொருவனின் திருவடி நீழலில் மூன்றுலகும் முகிழ்த்தன என்றும் கூறும்.
                நீல மேனி வாலிழை பாகத்து
      ஒருவன் இருதாள் நிழல்கீழ்
      மூவகை உலகும் முகிழ்த்தன முறையே

      ஞானசமபந்தப் பிள்ளையார் தமது வாக்கில்
      ‘ஒருடம்பினை ஈருருவாகவே உன் பொருட்டில் மீருருவாகவே
                                                      (3-114-10)
எனவைத்துப் போற்றுவர்.
     
                கல்லினோடு பூட்டி அமண்கையர் கடலிடை உய்க்க அரன் நாமம் நவிற்றி உய்ந்த அப்பரடிகளும்,
      ‘வார்தரு பூங்குழ வாளை மருவி யுடன் வைத்தவனும்’ (4-4-7)
எனவும்,
      ஆண் பெண் என்ற இரு பால் உருவமும் கலந்து பசுபதியாக நின்றருள்கின்ற பரமனை,
      ‘பாகம் பெண் ணாண்பாக மாய்நின்ற பசுபதியை (4-7-10)
எனவும் கண்டு களித்துப் பரவுவர்,
      பெற்றும் ஊர்ந்த பெம்மானை பெறுதற்கரிய தோழனாகப் பெற்ற நாவலூர் நம்பிகளும்,
                ‘பஞ்சண்டவல் குற்பணை மென்முலையா
            ளொடு நீரும்ஒன் றாய்இருத் தல்லொழியீர்’ (7-2-4)
               
பண்ணார் மொழி யானை யொர் பங்குடையீர்’   (7-2-6)
      ‘ஆணொடுபெண் ணாமுகு வாகிநின்றாய்’   (7-3-9)
என்று அம்மையோடப்பனாகி நிற்கும் அம்பலவாணனை அன்போடுருகி அகங்குழைந்து அளவிலாத பாடல்கள் கொண்டேத்துவார்.
      நரியைப் பரியாக்கி நன்மதுரை நகரில் நரை மூதாட்டி வந்தி தந்த பிட்டுண்டு தலையன்பில் கட்டுண்டு நின்ற கோமகனின் அருள் பெற்ற வாதவூர் தேசிகர் தனக்கு அம்மையும் அப்பனும் இல்லாத எம்பெருமான் உலகினர்க்கு அம்மையப்பராய் எழுந்தருளித் திருக்கோலம் காட்டுகின்ற பொலிவினை வாயாரப்பாடி மகிழ்வர். திருமேனியில் அம்மைக்கும் அப்பனுக்கும் உரிய திருவருள் திருவணிகளை முறைப்படக் கண்டு போற்றியது அவ்வன்புள்ளம். அதனோடு அவ்வாறு மாதொரு கூறனாக இருக்கின்ற திருக்கோலம் தொன்மைக் கோலம்என்றும் மகிழ்ந்துரைக்கும்.
                தோலும் துகிலும் குழையும் கருள் தோடும்
      பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
      சூலமும் தொக்க வளையும் உடைத்தொன்மைக்
      கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய கொத்தும்பி’      (8-10-15)

என்னும் திருப்பாடல் இவ்வழகை வெளிப்படுத்தும்.
      இவ்வாறு அம்மையுடன் அப்பனாகிக் காட்சி தரக் காரணமும் உண்டு என்கிறார் வாக்கின் மன்னர். அதற்கு என்ன காரணம்? அருளே! உலக உயிர்களை உய்யக் கொண்டருளலே முதன்மைக் காரணம் என்பார்.
                அரிதரு கண்ணியானை யொரு பாகமாக
      அருள் காரணத்தில் வருவார்’                      (4-8-3)

எனச் செப்புவர்.
      ‘ஒருவன் என்னும் ஒருவன் காண்கஎன வாசகர் செழுமறை மொழியும் மேற்கூறிய எல்லாம் அவனை இரண்டு பாகம் உடையான் என்கின்றன. எனில் இது எவ்வாறு சாத்தியமாகும் எனும் வினா எழுவது இயற்கையே! உலக உயிர்களில் தோய்வின்றித் தானே நிற்கும் தனிநிலையில்சிவம்என வழங்கப்படும். அதுவே உலகெலாம் ஆகி வேறாய் உடனுமாய் நின்று உயிர்களுக்கு அருள் செய்ய அவனோடு பின்னமின்றி, உயிர்கள் தன்னிலைமை சார் நிற்பது சத்தி. எனவே ஒன்றான முழுமுதற் பொருளையே இவ்வாறு சத்தியும் சிவமுமாக இரு தன்னமியுடையதாக எண்ணி வழிபடுதல் மரபு. சைவ சித்தாந்த சாத்திரமும்,
                அம்மையப்ப ரேஉலகுக் கம்மையப்பர் என்றறிக
      அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர்’         (திருக்களிற்று-1)

என்றும்,
                எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம்
      அவளும் நிற்பள்’                           (சித்தி-165)

என்றும்
      ‘அருளது சத்தியாகும் அரன் தனக்கு’          (சித்தி)
என்றும் சாற்றும்.
      தனிமனிதனாக இருக்கின்ற ஒரு நபரைஒருவன்என்று கூறுகின்றோம். அதே நபர் பெண்பாலாக இருப்பின் அவளைஒருத்திஎனச் சொல்லுவோம். ஒரே உடலில் ஆண்பால் ஒரு பகுதியும், பெண்பால் ஒரு பகுதியும் உள்ளன. எவ்வாறு அழைப்பது? ஒருவன் என அழைப்பின் பெண் பாலும் உடைமையின் அது முற்றக் கூறியதாகாது. ஒருத்தி எனின்ஆண்பாகமும் உடைமையின் அதுவும் வழுவே. பின் என்ன தான் செய்வது? எவ்வாறு பெயரிட்டழைப்பது? இரண்டுக்குமே பொதுவாகஒருவர்எனப் பொதுச் சொல்லால் அழைக்கலாமே! அந்தச் சொல் மட்டும் இல்லையேல் என்பாடு திண்டாட்டம் தான் என்பதாக இறைவனின் அர்த்தநாரீசுரத் திருக்கோலம் பற்றிய நினைவுக் கோவைகளை நிறைவு செய்கின்றார் தெய்விகக்கவிஞர் ஶ்ரீ குமருகுருபர சுவாமிகள்.
                ஒருவனுக்கும் ஒருத்திக்கும் உருவொன்றா னாலவ்
      உருவையிஃ தொகுத்தன் என்கோ வொருத்தி என்கோ
      இருவருக்கும் உரித்தாக ஒருவர் என்றோர்
      இயற்சொல்இல தெனின் யான்மற் றென்சொகேனே
                                                (சிதம்பர செய்யுட் கோவை-54)

      இவ்வாறு பொதுச் சொல்லால் அழைத்த போதிலும் நேயத்தை வெளிப்படுகின்ற உறவு முறையை எவ்வாறு காட்வது? உயிர்களுக்கு உயிர் அளித்தா தந்தை, தாயை விடப் பிறிதொரு உறவும் பெரிதில்லை. உலகுக்கே உயிர் கொடுத்த இறைவனையும் இறைவியையும் எவ்வாறு அழைப்பது? ‘அம்மையேஇல்லையென்றாகும். அப்போது இருவரும் உள்ள ஒரு கூட்டுருவத்தை நான் எவ்வாறு அழைப்பேன்? எப்படி எடுத்துரைப்பேன் என்றுவருந்திய ஶ்ரீ குமரகுருபர சுவாமிகள் அதற்கும் ஒர் வழி காண்கின்றார். என் தந்தை, என் தாய் எனும் சொற்கள் இரண்டும் விளியேற்கையில்எந்தாய்என நீளும் எனவேஎந்தாய்என அழைப்பேன். அவ்வாறு அழைப்பின் இரண்டு கூறும் (என் தந்தை, என் தாய்) அடங்கி விடுமே என நயப்புற மொழிவர்:
                செவ்வாய்க் கருங்கண்பைந் தோகைக்கும்
            வெண்மதிச் சென்னியற்கும்
      ஒவ்வாத் திருவுரு வொன்றே யுளதவ்
            வுருவினை மற்றெவ்வாச்
      சியமென் றெடுத்திசைப் பேமின்
            னருட் புலியூர்ப்
      பைவாய்ப் பொறியரவு அல்குல் எந்தாயென்று
            பாடுதுமே’*                           (சி. செ. கோ-73)

[* ஶ்ரீ குமரகுருபர சுவாமி பிரபந்தங்கள்
(டாக்டர் .வே. சாமிநாதய்யர் பதிப்பு 1939-ம் ஆண்டுப் பதிப்பு-பக்கம் 524)]

      இதில் சிலேடையாக அரவு போன்ற அல்குலையுடைய எம் தாயே எனவும், அரவையணிந்த அல்குலையுடைய எம் தந்தையே எனவும் இருபொருள் கொள்ளலாம்.
      இப்படிப்பட்ட நிலைகளில் ஆண் பெண் சேர்ந்த ஒரு கூட்டுருவமாகஅம்மையப்பனாகஇறைவனின் திருக்கோலத்தைக் கண்டு மகிழ்ந்து பல அருளாளர்கள் பாடி உள்ளனர். இருப்பினும் அவர்களுள் பட்டினத்துப் பிள்ளையார் அம்மையப்பனாகிய அர்த்தநாரீசுவரத் திருவுருவத்தில் திருவடி முதற்கொண்டு திருமுடி வரை உள்ள திருக்கோலப் பொலிவினை அடுத்தடுத்து அழகுற மொழிந்துள்ளமை கருத்தைக் கவர்வதாகும்.
திருவடிஅப்பன்
      இறைவன் திருவடி தெய்விகம் பெற்ற செந்தாமரை மலரின் செவ்வியினையுடையதாய் மலர்ந்துள்ளது. வாடாத நாண் மலரின் இதழ் எனச் சிவந்த நிறம் பெற்றுள்ளது. சிலம்பும், கழலும் அலம்பப் புனையப் பெற்றுள்ளது. பாலற்காகச் சினந்து காலனின் ஆற்றலை மாற்றியது. அகந்தையால் இறைவனைப் போற்றாது ஆற்றல் தோன்ற திருமால் ஏனமாகி அகழ அவற்குத் தோற்றாது நிமிர்ந்து நின்ற நெடிய தோற்றமுடையது. அன்பால் நினைவார்கள் பச்சிலை கொண்டு பூசித்தாலும் முன்வந்து அருளி அவர்களுக்கு முத்திப் பேற்றை நல்குவது என்பார்.
                தெய்வத் தாமரைச் செவ்வியின் மலர்ந்து
      வாடாப் புதுமலர்த் தோடெனச் சிவந்து
      சிலம்பும் கழலும் அலம்பப் புனைந்து
      கூற்றின் ஆற்றல் மாற்றிப் போற்றாது
      வலம்புரி நெடுமால் ஏனமாகி நிலம்புக்
      காற்றலின் அகழத் தோற்றாது நிமிர்ந்து
      பத்தி அடியவர் பச்சிலை இடினும்
      முத்தி கொடுத்து முன்னின் றருளித்
      திகழ்ந்துள தொருபால் திருவடி
                                          (திருவிடை. மும்மணிக்கோவை(1-9))



அம்மை-திருவடி
      அம்மையின் திருவடி செம்மை நிறங் கொண்டது. மென்மையானது தேவமகளிர் சின்ன மெல்லிய மலர்களைக் கொண்டு போற்றி வழிபட அம்மலர்கள் தீண்டுவதால் சிவப்புற்றது. பஞ்சும் அனிச்சமும் தோற்க அவற்றினும் நொய்ம்மையுடையது என்று கூறுவார் பட்டினத்தடிகள்.
                “………………………………………………………………அகம் சேந்து
      மறுவில் கற்பகத் துறுதளிர் வாங்கி
      நெய்யில் தோய்த்த செவ்வித் தாகி
      நூபுரம் கிடப்பினும் நொந்து தேவர்
      மடவரல் மகளிர் வணங்குபு வீழ்த்த
      சின்னப் பன்மலர் தீண்டிடச் சிவந்து
      பஞ்சியும் அனிச்சமும் எஞ்ச எஞ்சாத்
      திருவொடும் பொலியும் ஒருபால் திருவடி.

திரு இடை:-
சிவம்
      சிவமாகி நிற்கின்ற செம்பொருளின் திரு இடை, வேங்கையின் தோலைக் கட்டியுள்ளது. அதன்மேல் பாம்புக் கச்சை ஆர்த்துள்ளது. அழகுறத் திகழ்கின்றது எனக் கவினுறக் கவி யாப்பார் அடிகள்.
                நீலப் புள்ளி வாளுகிர் வேங்கைத்
      தோலின் கலிங்கம் மேல்விடுத் தசைத்து
      நச்செயிற் றரவக் கச்சையாப் புறுத்துப்
      பொலிந்துள தொருபான் திருவிடை          (திரு. மும். கோ)

சத்தி
      உமையன்னையின் ஒளிவீசுகின்ற சிவந்த ஆடை அணிந்து அதன்மேல் ஒலிக்கின்ற மணிகள் பதித்த மேகலை கட்டிய திரு இடையை
                “………………………………………………………………..இலங்கொளி
      அரத்த ஆடை விரித்து மீதுறஇ
      இரங்குமணி மேகலை ஒருங்குடன் சாத்திய
      மருங்கிற் றாகும் ஒருபால் திருவிடை

என்பர் பட்டினத்தடிகள்.
திருமார்பகம்எம்பெருமான்
      சிவந்த கண்ணையுடைய பாம்பும், பசிய கண்கொண்ட ஆமையும் பன்றியின் கொம்பும், எலும்பு மாலையும், முப்புரி நூலும் புனைந்து நீறணிந்து பொலியும் திருமார்பகம் வெண்மையான நீறு அணிந்த ஒரு பவள மலையைப் போல் காட்சி தருவதாகக் காட்டுவர் பட்டினத்தடிகள்.
                செங்கண் அரவும் பைங்கண் ஆமையும்
      கேழற் கோடும் வீழ்திரள் அக்கும்
      நுடங்கு நூலும் இடங்கொண்டு புனைந்து
      தவளநீ றணிந்ததோர் பவளவெற் பென்ன
      ஒளியுடன் திகழும் ஒரு பால் ஆகம்.

எம்பெருமாட்டி
      அம்மையின் திருமார்பகம் கச்சும் முத்துமாலையும் அழகுறப் புனைந்து, செஞ்சாந்துக் குழம்பு அணிந்து, குங்குமக் குழம்பும் எழுதப் பெற்று பொன்தாமரையின் முற்றாத அரும்பு போன்று அழகுற அமைந்துள்ளது என்பார் பட்டினத்து அடிகள்.
                வாரும் வடமும் ஏர்பெறப் புனைந்து
      செஞ்சாந் தணிந்து குங்குமம் எழுதிப்
      பொற்றா மரையின் முற்றா முகிழென
      உலகேழ் ஈன்றும் நிலையில் தளரா
      முலையுடன் பொலியும் ஒருபால் ஆகம்.

திருக்கரம்
      மூன்று இலைவடிமுள்ள வேலும், மழுப்படையும், தமருகப் பறையும் ஆகிய இவற்றோடு பாம்பினையும் எங்கெங்கும் அணிந்துள்ள இறைவனின் திருக்கரத்தை
                அயில்வாய் அரவம் வயின்வயின் அணிந்து
      மூவிலை வேலும் பூவாய் மழுவும்
      தமருகப் பறையும் அமர்தரத் தாங்கிச்
      சிறந்துள தொகுபால் திருக்கரம்

எனச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
      இறைவியின் திருக்கரமோ, செறிவான சூடகம் எனும் அணியையணிந்து கழங்கும் மென்மையான பந்தும் கிளியும் தாங்கி நிற்கின்றது எனப்பாடுவர்
                …………………………………………………….செறிந்த
      சூடகம் விளங்கிய ஆடகக் கழங்குடன் 
      நொம்மென் பத்தும் கம்மென கிள்ளையும்
      தரித்தே திகழும் ஒருபால் திருக்கரம்

திருநெடுநாட்டம்
      சிவபெருமானின் திருநாட்டம் சூரியனும் அக்னியும் கலந்து உண்டான வெம்மையுடன் விளங்குவதாகவும், மான் கண்ணின் செவ்வியும், வெண்மையான பாலிற்கிடந்த நீலமணி போன்ற ஒளியும், குளத்து நீரில் உள்ள குவளைப் போதின் குளிர்ச்சியும், நிறமும் அடியார்களின் வெப்பு நோய்க்கிரங்கி இறைவனின் திருநாட்டம் உலகம் ஏழினையும் காப்பதாகவும் அழகுற மொழிவார் அடிகள்.
                1.     இரவியும் எரியும் விரவிய வெம்மையின்
            ஒருபால் விளங்கும் திருநெடு நாட்டம்
               
2.     நல்வி மானின் செவ்வித் தாகிப்
            பாலில் கிடந்த நீளம் போன்று
            குண்டுநீர்க் குவளையில் குளிர்ந்து நிறம்பயின்று
            எம்மனோர்க் கடுத்த வெம்மைநோய்க் கிரங்கி
            உலகேழ் புரக்கும் ஒருபால்நாட்டம்

திருமுடிப்பொலிவு
      நொச்சி, ஊமத்தை, கொன்றை, தும்பை ஆகிய அழகுறும் மலர்களும், கங்கை நதியும் பசிய தலைமாலையும், பாம்பும், குழவித்தின்களும் ஆகிய இவற்றோடு நெருப்பில் திரித்தாற் போன்ற அழகிய சடையுடன், நான்முகன் ஆகிய அன்னப்பறவை காணாத படிக்குக் கருத்தைக் கடந்து உள்ளது இறையோன் திருமுடியெனப் பொற்புற மொழிவர்,
                நொச்சிப் பூவும் பச்சை மத்தமும்
      கொன்றைப் போதும் மென்றுணர்த் தும்பையும்
      கங்கை யாறும் பைங்கண் தலையும்
      அரவும் மதியமும் விரவித் தொடுத்துச்
      சூடா மாலை சூடிப் பீடுகெழு
      நெருப்பில் திரித்தனைய உருக்கிளர் சடிலமொடு
      நான்முகங் கரந்த பால்நிற அன்னம்
      காணா வண்ணம் கருத்தையும் கடந்து
      சேண்இகத் துளதே ஒருபால் திருமுடி
               
      தேமகளிர் கற்பகப் பூந்தளிரைப் பறித்துக் தொடுத்த தெய்வ மாலையை நீலக்குழல் மேல் அணிந்த சிறப்பினையுடையது இறைவியின் திருமுடி. அம்மாலையில் வேண்டும் தேனும் கிண்டும் என்னும் கருத்தமைய,
                “………………………………………………………………….…பேணிய
      கடவுள் கற்பின் மடவரல் மகளிர்
      கற்பக வனத்துப் பொற்பூ வாங்கிக்
      கைவைத்துப் புனைகந்த தெய்வ மாலை
      நீலக் குழல்மிசை வளைஇமேல் நிவந்து
      வேண்டும் தேனும் கிண்டுபு திளைப்பந்
      திருவொடு பொலியும் ஒருபால் திருமுடி

      இப்படிப்பட்ட திருக்கோலப் பொலிவினைக் காணுதல் அனைவர்க்கும் வாய்ப்பதன்று. இதன் சீர்மையை எண்ணிட முடியாதது. நினைத்துப் பார்க்கவும் அருமையானது. இவ்விரு உருவும் ஒன்றாகி உலகேழும் ஈன்றதாகக் கவிபடைப்பார் பட்டினத்துப் பிள்ளையார்.
இனைய வண்ணத்து நினைவரும் காட்சி
     
     
           

     

     


      

No comments:

Post a Comment