Saturday, October 29, 2016

சிவமயம்
ஶ்ரீ மஹாதேவ ஜயம்
திருக்கயிலாய யாத்திரை
திருப்பனந்தாள் ஶ்ரீ காசிமடத்து 21-வது அதிபர்
கயிலைமாமுனிவர்
ஶ்ரீலஶ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான்
சுவாமிகள் அவர்கள்,

ஶ்ரீ காசிமடம் திங்கள் இதழ் ஶ்ரீகுமரகுருபரர், புரட்டாசி, கயிலைச் சிறப்பிதழுக்கு வழங்கியருளியது

சிவஞான பூஜா மலர் துன்மதி ஆண்டு - (1981)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]

      பூவினுக் கருங்கலம் பொங்குதாமரை ஆதல் போல, உலகினுக் கருங்கலம் உயர் கயிலாயமாம். இது, காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடும் தனி முதல்வன் வீற்றிருந்தருளும் சிறப்புடையது. மூவுலகும் நான்மறையும் எண்ணின் மாதவம் வந்து எய்திய புண்ணியம் திரண்டுள்ளது போல்வது. ஊழிதோறும் முற்றும் உயர்ந்தோங்கும் சிறப்பினது.
      இத்தகைய உயர்ந்த திருக்கயிலாய மலையைக் கண்டு வழிபடப் பெற்ற புண்ணியமுடையவர்கள் நம்திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதினத்து எழுந்தருளியிருந்து அருட்செங்கோல் ஓச்சியருளிய ஶ்ரீலஶ்ரீ கயிலைக்குருமணி அவர்கள் ஆவார்கள். அவர்கள் அப்பேறு பெற்ற முதலே நமக்கும் அப்புண்ணியப்பேறு அடைய வேண்டும் என்னும் எண்ணம் திருவருளால் முகிழ்த்தது.
      திருவருளால் உதித்த அவ்வெண்ணம் திருவருளாலன்றி நிறைவேறாதன்றோ! கந்தர் சஷ்டியில் திருச்செந்தூர்ப் பெருமானை வழிபடும் புண்ணியம் கடந்த சில ஆண்டுகளாக தமக்குக் கிடைத்து வருகிறது. அவ்வகையில் சென்ற ஆண்டு கந்தர் சஷ்டியில் திருச்செந்திலாண்டவன் திருமுன்னிலையில் வழிபடுங்கால், தொண்டைமண்டல ஆதீனம் சீலத்திரு குருமகாசந்நிதானம் அவர்களும் உடனிருந்தார்கள். ஈரோட்டு அன்பர் திரு. அழகப்பன் அவர்களும் உடனிருந்தார். முன்னர் அரும்பிய திருக்கயிலாய யாத்திரை செந்திலாண்டவன் திருமுன்னிலையில் மலர்வதாயிற்று. அன்றே சீலத்திரு குருமகாசந்நிதானம் அவர்களும் ஈரோட்டு அன்பரும் நாமும் திருக்கயிலாய யாத்திரை செல்ல ஆயத்தமானோம். பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் தாமும் யாத்திரையில் உடன் வர விருப்பம் கொண்டார்கள். அப்பொழுதிருந்தே வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யலானோம்.
      இவ்வேற்பாடுகளைச் செய்யத் தொடங்கிய பொழுதே இறைவனின் அருள் பெற்றுச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தால் தென்னாட்டுத் திருத்தலங்களில் குறிப்பாகவும் சிறப்பாகவும் அமைந்த திருத்தலயாத்திரை ஒன்றை மேற்கொண்டோம். இராமேசுவரம், உத்தரகோசமங்கை, திருச்செந்தூர், கன்னியாகுமரி, மதுரை, பழனி ஆகிய திருத்தலங்களுக்குச் சென்று வழிபாடாற்றி வந்தோம்.
      குருவருளால் வைத்தபடியிருக்கமாட்டாத மாந்தர்க்குச் சித்த சலமாம் தினம் என்பது தருமை ஆதீனம் குருமுதல்வரின் திருவாக்காகும். வடநாட்டு யாத்திரையாயினும் தென்னாட்டு யாத்திரையாயினும் குருவருள் பெற்றுச் செல்வதே நம் மரபாகும். இம்முறை குருவருள் பெற்றுச் செல்வதற்கு உரிய காலம் தருமபுர ஆதீனம் குருமுதல்வரின் குருபூசை நாளாகவும் அமைந்தது. தருமை ஆதீனத்து இருபத்தாறாவது பட்டத்தில் எழுந்தருளியிருந்து அருட்செங்கோல் ஓச்சிவரும் ஶ்ரீலஶ்ரீ குரு மகாசந்நிதானம் அவர்கள் நம்பால் மிகவும் பெருங்கருணை கொண்டவர்கள். ஶ்ரீலஶ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் சொக்கநாதப் பெருமானை வழிபட்டு மாறிலா மகிழ்ச்சியில் திளைத்து நின்று நமக்கு அருட்பிரசாதம் வழங்கும் பொழுதுஇது திருக்கயிலை செல்வதற்குரிய அருட்பிரசாதம்என அருளிச் செய்தார்கள். நாம் திருக்கயிலை செல்ல விண்ணப்பித்துக் கொள்வதற்கு முன்னமேயே கருத்தறிந்து முடிக்கும் ஶ்ரீலஶ்ரீ குருமகாசந்நிதானம் அவர்களின் அருள்நிலை இதுவாகு இருந்தது.
      குருபூசை நாளன்று தருமபுர ஆதீனத்துக்குச் சொந்தமான இருபத்தேழு தேவஸ்தானங்களிலிருதும் பிரசாதம் வருதலும் குருமகாசந்நிதானம் அவர்கள் ஏற்றருளுதலும் மரபாகும். அவ்வமயத்து குருமகாசந்நிதானம் அவர்கள் மட்டும் இருந்தருளி ஏற்பார்கள். இம்முறையோ நம்மையும் உடனிருக்கப் பணித்து இருபத்தேழு தேவஸ்தானங்களின் பிரசாதங்களையும் தாம் பெற்று, நமக்கும் ஒருங்கு வழங்கியருளினார்கள். இவ்வாறு நிறைவாகக் கிடைத்த குருவருள் நமக்குத் திருக்கயிலையை வழிபட்டு வருவதற்கு மிக்க எழுச்சியையும் இன்ப மீதூர்வையும் தந்தருளியது.    
      வேண்டுவார் வேண்டுவதே ஈந்தருளும் பெருமானின் திருவருளால் திருக்கயிலாய யாத்திரை சென்று வருவதற்கு உரிய சூழலும் ஆயத்தங்களும் உருவாகி வந்தன 23-6-1982 புதன்கிழமை புறப்படுவதெனத் தீர்மானிக்கப்பட்டது. நம் திருமடத்தில் நாம் நாளும் வழிபாடாற்றி வரும் சொக்கலிங்கப் பெருமானையும் செந்திற் பெருமானையும் வழிபட்டு அப்பெருமானின் திருவருளையும், அதுபொழுது தருமை ஆதீனம் ஶ்ரீலஶ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் வழங்கியருளிய சொக்கநாதப்பெருமானின் அருள்பிரசாதத்தைக் கவசமாக ஏற்று அக்குருவருளையும் துணைகொண்டு 23-6-1982 புதன்கிழமை காலை ஶ்ரீகாசிமடத்திலிருந்து புறப்படலானோம்.
      ஶ்ரீகாசி வினாயகரை வழிபட்ட பின்பு உந்து வண்டி சென்னை நோக்கி விரைந்தது. மாலை 5 மணியளவில் சென்னை அடைந்தோம். புகைவண்டி நிலையத்திற்குத் தருமையாதீன பிரசார நிலைய சுவாமிகள், திரு. கி. இராமலிங்க முதலியார் திரு. மு. அருணாசலம் பிள்ளை முதலிய அன்பர்கள் பலர் வந்திருந்து வழியனுப்பினார்கள். உடனே தில்லிக்குப் புகை வண்டிப் பயணம் தொடங்கியது. 25-6-1982 வெள்ளியன்று தில்லியை அடைந்து தில்லித் தமிழ்ச் சங்கத்தில் தங்கலாயிற்று. 26-6-1982 முதல் 30-6-1982 வரை தில்லியில் யாத்திரைக்கான முன்னேற்பாடுகள் நடந்தன. உத்தர சுவாமி மலையில் அபிஷேக ஆராதனைகள் செய்விக்கலாயிற்று. 1-7-1982 வியாழனன்று அரசாங்க அதிகாரி திரு. எஸ். எஸ். சிங் என்பவர் யாத்திரை செல்வோருக்கு அது பற்றிய விளக்கம் கொடுத்தார். செல்லும் வழி, வழியில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள், தங்குமிடம், உணவு வசதி, எடுத்துச் செல்லவேண்டிய பொருள்கள், அவற்றின் அவசியம் முதலானவை பற்றி விளக்கினார்.
      2-7-1982 வெள்ளியன்று யாத்திரை செல்வோருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப் பெற்றன. 3-7-1982 சனியன்று மருத்துவப் பரிசோதனையின் முடிவுகள் தெரிவிக்கப்பட்டு யாத்திரை செய்ய அனுமதியும் கிடைத்தது. தேவையான பொருள்கள் வாங்கிச் சேகரிக்கப் பெற்றன. தில்லியிலிருந்து இந்திய எல்லையான லிப்புக் கணவாய் வரை சென்று வரும் செலவுக்காக உந்துக் கட்டணம், தங்குமிடம், உணவு, மருத்துவ வசதி முதலியவற்றுக்காக இந்திய அரசாங்கத்திடம் நபர் ஒருவருக்கு ரூ. 2500 செலுத்த வேண்டும். ஒரு நபர் 420 டாலர் வரை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. அமெரிக்க டாலர் சீனாவின் எல்லையில் சீன நாணயமாக மாற்றிக் கொள்ளப் பயன்படும். [1 டாலர் = 1.88 யாண், 1 யாண் = சுமார் 5 ரூபாய். யாண் என்பது சீன நாணயம்.]
      3-7-1982 சனிக்கிழமை காலை தொண்டை மண்டல ஆதீனம் சீலத்திரு குருமகாசந்நிதானம் அவர்களும், பேரூர் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களும், ஈரோடு திரு அழகப்பன் அவர்களும் விமானம் மூலம் தில்லிக்கு வந்தார்கள். அன்றே அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனையும் முடிவும் தெரிவிக்கப்பட்டு அனுமதியும் வழங்கப் பெற்றன.
      4-7-1982 ஞாயிறன்று காலை 7:30 மணிக்குத் தில்லியிலிருந்து அரசாங்க அனுமதி பெற்ற பயணப் பேருந்து புறப்பட்டது. இந்தப் பேருந்தில் 27 பேர் செல்லலாம். தொண்டைமண்டல ஆதீனம் சீலத்திரு குருமகாசந்நிதானம் அவர்களும் நாமும், பேரூர் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களும், நம் காரியம் பாதர்க்கும் ஆர். பாலசுப்பிரமணியன், எஸ். தேவதாஸ், ஆர். சுரேஷ் என்ற மூவரும், ஈரோடு முனிசாமி, திருமதி அழகப்பன், கிருஷ்ணன், ஈரோடு முனிசாமி, திருமதி முனிசாமி, தஞ்சாவூர் திருமதி பங்கஜம் தாஸ், பங்களூர் எஸ். சத்தியநாராயண அய்யர், திரு, ஷெட்டி, சென்னை குமார் என்போர்களும் மற்றும் வேறு மாநிலங்களைச் சார்ந்த சிலருமாக மொத்தம் 25 பேர்கயிலை மலையானே போற்றி போற்றி என்ற முழக்கத்துடன் பேருந்தில் புறப்பட்டோம். முந்திய சில தினங்களில் முதலிரண்டு யாத்திரை குழுக்கள் சென்றன. நாம் சென்றது மூன்றாவது குழுவாகும்.
      கஜிராலா என்ற இடத்தில் காலை உணவும், ருத்ரபூர் என்ற இடத்தில் நண்பகல் உணவும் வழங்கப் பெற்றன. தில்லியிலிருந்து 452 கி.மீ. பயணம் செய்த பிறகு இரவு 8 மணிக்குச் சம்பாவத் என்ற இடத்தை அடைந்தோம். இரவு அங்கே தங்கினோம். இரவில் கயிலைப் பதிகம் ஓதலும் அருளுரையாற்றலும் நடந்தன. இதே போல் தங்கும் இடமெங்கும் இரவில் நடந்தன.
      5-7-1982 திங்களன்று சம்பாவத்தில் காலை உணவு வழங்கப்பெற்றது. நண்பகலுக்காக உணவு பொட்டலம் அளிக்கப் பெற்றது. காலை 7:30 மணிக்குப் பேருந்து புறப்பட்டது. பித்ராகாட் என்ற இடத்தில் நண்பகல் 12 மணிக்கு உணவுப் பொட்டலங்கள் பிரிக்கப்பட்டன. பித்ராகாட்டிலிருந்து சிறிது தொலைவு சென்றதும் குருநானக்சாகர் என்ற அனை உள்ளது சம்பாவத்திலிருந்து 90 கி.மீ. சென்றதும் தினக்பூர் என்ற இடத்தை அடைந்தோம். இங்கிருந்து இமயமலையின் அடிவாரம் தொடங்குகிறது. மலைப் பாதையில் பேருந்து ஏறிச்சென்றது. மாலை 5:30 மணிக்கு காளிகங்கா சங்கமக் கட்டத்தை அடைந்தோம். சங்கமத்தில் நாம் மட்டும் நீராடி வழிபாடு செய்தோம். மீண்டும் பேருந்து புறப்பட்டு இரவு டார்ச்சூலா என்ற இடத்தை அடைந்தது.
      டார்ச்சூலா என்ற சொல் அடுப்பைப் போல மூன்று பக்கம் மலை அடைப்புக்களையும் ஒரு பக்கம் வழியையும் உடையது என்று பொருள்படும். இந்த ஊர் இத்தகைய அமைப்புடையதால் டார்ச்சூலா என்று அழைக்கப்படுகிறது. இவ்வூர் நேபாளத்தில் எல்லை ஓரத்தில் இந்தியப் பகுதியில் இருக்கிறது. இவ்விடத்தில் கூடாரத்தில் இரவு தங்கினோம். மலை வழியில் ஊன்றி நடக்க உதவுகின்ற ஊன்றுகோல் (கம்பு) இவ்வூரில் தான் கிடைத்தது. ஒரு கம்பின் விலை ரூ 10. தில்லி முதலிய இடங்களில் இது கிடைக்கவில்லை. 6-7-1982 செவ்வாய் அன்று காலைகும் நண்பகலுக்கும் சேர்த்து உணவுப் பொட்டலம் வழங்கப்பட்டது. டார்ச்சூலாவிலிருந்து காலை 7:30க்குப் பேருந்து புறப்பட்டு 19 கி,மீ. சென்றதும் 8:30 மணிக்குத் தவாகாட் என்ற இடத்தை அடைந்தது. இவ்விடத்தோடு பேருந்து நின்று விடுகிறது. இவ்விடம் 3700 அடி உயரம் இதிலிருந்து நடை ஆரம்பமாகிறது. சாமான்களை ஏற்றக் குதிரைகள் அளிக்கப் பட்டன. நபர் ஒருவருக்கு 2 கிலோ சாமான் வரை அனுமதிக்கப்படுகிறது. அதற்கு மேல் ஒவ்வொரு கிலோவுக்கும் ரூ 15 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நடைப்பயணத்தின்போது உதவிக்கும் காவலுக்குமாக இராணுவத்தார் ஆறு பேர் வருகின்றார்கள். இவர்களில் ஒருவர் ஒயர்லஸ் ஆப்பரேட்டர்; மற்றொருவர் மருத்துவர். இந்த ஏற்பாடுகளை எல்லாம்தவாகாட்டில் உள்ள குமான் மண்டல் விகாஸ் நிகம் என்ற நிறுவனம் செய்து கொடுக்கிறது.
      தவாகாட்டில் காலை 10 மணிக்கு நடைப் பயணம் தொடங்கியது. சாமான்கள் குதிரை மேல் எற்றிச் செல்லபட்டன. வழியில் இரண்டு சிகரங்கள் ஏறி இறங்கினோம். 17 கி.மீ நடந்தபின் மாலை 5:30 மணிக்கு சிர்க்கா என்ற இடத்தை அடைந்தோம். உயரம் 8000 அடி இங்கே ஓய்வு விடுதி உள்ளது. வசதிக்காக கூடாரமும் உள்ளது. இங்கே அன்று இரவு திருப்பதிகம் ஓதப்பெற்றது.
      7-7-1982 புதனன்று சிர்க்காவில் காலைக்கும் நண்பகலுக்கும் சிற்றுண்டிப் பொட்டலம் வழங்கப்பட்டது. காலை 7:30 மணிக்கு நடை பயணம் தொடங்கினோம் மிக உயரமான மலை ஏற்றம் ஏற்றத்தின் முடிவான இடல் ரங்ளிங்டாப் என்று அழைக்கப்படுகிறது. உயரம் 9840 அடி அதன் பிறகு ஒரே இறக்கம். இவ்விடத்தில் பயணம் கடுமையாக இருக்கிறது. 17 கி.மீ. நடந்த பின் ஜிப்தி என்ற இடத்தை மாலை 6:30 மணிக்கு அடைந்தோம். இங்கே ஓய்வு விடுதியும் கூடாரமும் உள்ளன. சுற்றுப்பிறத்தில் ஆப்பில், பிளம்ஸ் முதலிய மரங்கள் இருக்கின்றன. யாத்ரீகரில் சிலர் பழங்களைப் பறிக்க முயன்றனர். அப்போது காவற்காரன் அப்பழங்கள் பிஞ்சு என்று கூறினான். அதைக்கேளாமல் சிலர் பறித்துத் தின்றனர். பிளம்ஸ் கடும் புளிப்பாக இருந்தது என்று பேசிக் கொண்டரன். ஓய்வு விடுதி, இராணுவத்தார் உடையைப்போல் பசுமை கலந்த சிமெண்ட் நிறம் பூசப்பட்டிருந்தது. இந்த யாத்திரையின் வழியில் உள்ள எல்லா விடுதிகளும் இதே நிறத்தில் இருந்த்தால், இந்த நிறமுள்ள கட்டடத்தைத் தொலைவில் கண்டவுடன்அதோ விடுதிஎன்று சொல்லி உற்சாகமாக விரைந்து நடக்க ஏதுவாக இருந்தது. 8-7-1982 வியாழன் அன்று காலை, நண்பகல் உணவுப் பொட்டலங்களைப் பெற்றுக் கொண்டு ஜிப்தியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டோம். வழி ஏற்றமும் இறக்கமுமாக இருந்தது. 8 கி.மீ. நடந்து மாலை 3 மணிக்கு மால்பா என்ற இடத்தை அடைந்து அன்றிரவு தங்கினோம். இங்கே ஓய்வு விடுதியும் கூடாரமும் உள்ளன. நேற்று 17 கி,மீ. நடந்த நாங்கள், இன்று 8 கி.மீ. தான் நடக்க முடிந்தது. இதுவழியின் கடுமையை உணர்த்தும். 9-7-1982 வெள்ளியன்று காலை உணவு முடித்துக் கொண்டு புறப்பட்டோம். வழி மிகவும் ஏற்றமாக இருந்தது. 8 கி.மீ. சென்றதும் பகல் 2 மணிக்குப் புத்தி என்ற இடத்தை அடைந்தோம். உயரம் 9100 அடி. இரவு இங்கே தங்கினோம்.
      10-7-1982 சனிக்கிழமையன்று காலை 6 மணிக்குப் புத்தியிலிருந்து புறப்பட்டு 14 கி.மீ. நடந்து மாலை 3 மணிக்கு குஞ்ஜி என்ற இடத்தை அடைந்தோம். உயரம் 10,330 அடி. வழியில் ஏற்றமும் இறக்கமும் மிகுதியாக உள்ளன. அவ்வழி அடிக்கடி மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அபாயகரமானதாகவும் உள்ளது. புத்திக்கும் குஞ்சிக்கும் இடையே கர்ப்பியாங் என்ற கிராமம் உள்ளது. இங்கே அஞ்சல் நிலையம் இருக்கிறது. இதற்கு அப்பால் உள்ள இடங்களில் அஞ்சல் நிலையம் கிடையாது. குஞ்சியில் சர்ப்பக்கோவில் உள்ளது. அங்கே, உயிருள்ள சர்ப்பங்கள் வழிபடப்படுகின்றன. இவ்வூரில் கோதுமை, சோளம், பூண்டு, உருளைக்கிழங்கு முதலியன பயிரிடப்படுகின்றன. 11-7-1982 ஞாயிறன்று காலை புறப்பட்டு 9 கி.மீ. நடந்து காலாபாணி என்ற இடத்தை அடைந்தோம். உயரம் 11,800 அடி. இவ்விடம் இந்திய இராணுவதளத்தின் கடைசி எல்லை. இங்கே காளிகோயில் ஒன்று உள்ளது. காளிகங்கை இங்கே உற்பத்தியாகிறது என்று சொல்லப்படுகிறது. இதற்கு ஏற்ப இக்கோயிலில் காளியின் காலடிக்குக் கீழே நீரோடை ஒன்று ஓடுகிறது. நாம் மட்டும் இங்கே நீராடினோம். காலாபாணி என்ற சொல் கருப்புத் தண்ணீர் என்று பொருள்படும். இங்கு ஓடும் காளிகங்காவின் நீர் தூரத்துப் பார்வைக்குக் கருப்பு நிறமாகத் தோன்றுகிறது. கையில் நீரை அள்ளினால் நிறம் எதுவும் இல்லாமல் சாதாரணமாகக் காணப்படுகிறது.
      காலாபாணி என்ற இடத்தில் கூடாரத்தில் இரவு தங்கினோம். கூடாரத்துக்கு அண்மையில் 500 அடி உயரத்தில் ஒரு மலைக்குகை தெரிகிறது. அக்குகையில் வியாசர் தவம் செய்தார் என்றும், அதற்கு வியாசர்குகை எனப்பெயர் வழங்குகிறது என்றும் அங்குள்ளவர்கள் சொல்லுகிறார்கள். மற்றும் கூடாரத்துக்கு ஒரு மைல் தொலைவில் வெந்நீர் ஊற்று ஒன்று இருக்கிறது. சிலர் அங்கே சென்று நீராடி வந்தனர்.
       12-7-1982 திங்களன்று காலை காலாபாணியிலிருந்து புறப்பட்டோம். நடக்கும் போது பெருமூச்சு வாங்குகிறது. இரைக்கிறது. தங்கித்தங்கி நடக்க வேண்டி இருக்கிறது. சிறிது இடர்ப்பாட்டுடன் 8 கி.மீ. நடந்து நாபிடாங் என்ற இடத்தை அடைந்தோம். உயரம் 13,000 அடி இரவு அங்கே தங்கினோம். திருப்பதிகம் ஓதல், அருளுடையாடல் ஆகியவை நடந்தன.
      13-7-1982 செவ்வாயன்று நாபிடாங்கிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டு 10:30 மணிக்கு லிபுலேக் என்ற இடத்தை அடைந்தோம். உயரம் 16,890 அடி. காலாபாணியிலிருந்து இவ்விடம் வரை இந்திய திபேத்திய எல்லைப் போலீசார் [I.T.B.P Police] துணை வந்தனர். லிபுலேக் என்ற இடம் இந்திய சீன எல்லைக் கோட்டில் உள்ளது. இதற்கு அப்பால் சீன எல்லை.
      லிபுலேக்கைத் தாண்டினால் 4 கி.மீ. தொலைவுக்குக் கடுமையான இறக்கம் ஒஅனி பாறையாக வழிநெடுக உறைந்துபோய் வழி வழுக்குகிறது. நடப்பது மிகவும் கடினம். முன்னே சாய்ந்தால் குப்புற வீழ்ந்து பனியில் சருக்க நேரும். பின்னே சாய்ந்தால் மல்லாந்து வீழ்ந்து பனியில் சருக்கிட நேரும். இந்த வழியில் நம்முடன் வந்தவர்களில் பலர் விழுந்தும் உருண்டும் சிறிதளவு  வருந்த நேர்ந்தது. கூலியாட்கள் இவ்விடத்தில் சுமை மூட்டைகளைத் தூக்கிக்கொண்டு நடப்பதில்லை. மூட்டைகளைப் பனியின் சருக்கலில் உருட்டி விடுகிறார்கள். அவைகளைக் கீழே இறங்கி வந்த பிறகு எடுத்துக் கொள்கிறார்கள். சாமான் மூட்டைகளை இப்படி உருட்டி விட்டதால் மூட்டைக்குள் இருந்த பெட்டிகள் சில உடைந்து போயின. கைப்பிடிகள் ஒடிந்து விட்டன. பாட்டில்கள் சிதறுண்டன.
      இவ்விதம் 4 கி.மீ. பனிச்சருக்கலில் இறங்கிய பிறகு அனைவரும் குதிரை மீது ஏறிக்கொண்டோம். குதிரைப் பயணமாக 21 கி.மீ. கடந்து தக்ளகோட் என்ற இடத்தை அடைந்தோம். தக்ளகோட் என்ற இடம் சீன எல்லைக்குள் இருக்கிறது. இங்கே சீன இராணுவமுகாம் உள்ளது. அவ்விடத்தின் யாத்திரை செய்வோர்களுக்குச் சுங்கப் பரிசீலனை செய்த பின்னரே தங்குமிடம் அளிக்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு (சீனநேரம் 9:30க்கு) நம்முடன் வந்தவர்கள் 25 பேருக்கும் பரிசோதனை [செக்கிங்] நடைபெற்றது. இரவு அங்கே தங்கினோம்.
      தக்ளகோட்டிலிருந்து கயிலை மலையின் அடிவாரத்தில் உள்ள டார்சேன் கேம்ப் வரை டிரக்கில் சென்று வர ஒரு நபர்க்கு சீன அரசாங்கத்துக்கு ரூ 1000 கட்டணம் செலுத்த வேண்டும். காலை உணவுக்கு ரூ 10ம், பகல் உணவுக்கு ரூ20ம் இரவு உணவுக்கு ரூ20ம் செலுத்த வேண்டும். கீரைரசமும், வேர்க்கடலை வறுவலும் உணவாகத் தருகிறார்கள். படுக்கை, டெண்ட் வசதியும் அளிக்கிறார்கள். நமக்கும் நம்மவர்களுக்கும் தனியாக நம் காரியம் பார்ப்போரைக் கொண்டு உணவு தயாரித்துக் கொண்டோம்.
      14-7-1982 புதனன்று தக்ளகோட்டில் சீன ராணுவ முகாமில் யாத்திரைக் கட்டணத்தை டாலாராகச் செலுத்தினோம். சீன எல்லைக்குள் பயன்படுத்தற்காக அமெரிக்க டாலரைக் கொடுத்துச் சீனநாணயமான யாண் பெற்றுக்கொண்டோம். சீன ராணுவமுகாமில் ஆங்கிலம் தெரிந்தவர் ஒருவர் மட்டுமே இருக்கிறார். இதனால் மொழிப்பிரச்சனை ஏற்பட்டு ஒருவர் கருத்தை மற்றவர் அறிவதில் இன்னல் உண்டாகிறது. இங்கே குளியலறை கழிவறை வசதிகள் இல்லை. நம்நாட்டவர்க்கு இதனால் இடர்ப்பாடும் மன அருவருப்பும் ஏற்படுகிறது.
      புதன்கிழமை இரவு சீனர்கள் யாத்திரீகர்களுக்குத் திரைபடம் (பிலிம்) காட்டினார்கள். அவை சீனநாட்டின் இயற்கை அமைப்பு, ஆக்கவேலை முதலியன பற்றி அமைந்திருந்தன. படத்தின் ஒலி சீன மொழியாக இருந்தது. எனவே படத்தை மட்டும் கண்டு செய்திகளை ஊகித்தறிய வேண்டியிருந்தது. 15-7-1982 வியாழனன்று நமக்கு மெளனவிரதம்; மேலும் அன்றைக்கு ஜன்மநட்சத்திரமான பரணி காலை 5 மணிக்கு [சீன நேரம் 7:30க்கு] சீன டிரக் ஒன்று வந்தது. யாத்திரைக்குழுவில் உள்ள 25 பேர்கள் இரண்டு குழுவாகப் பிரிக்கப்பெற்றனர். நாமும் நம்மவர்களும் ஒருபிரிவாகவும், வேறுமாநிலத்தவர் வேறொரு பிரிவாகவும் அமைய நேர்ந்தது. வேறு மாநிலத்தவர் நாணயம் ஒன்றைச் சுண்டிப் பூவா தலையா போட்டுப்பார்த்து நம்மையும் நம்மவர்களையும் முதலில் போக அனுமதித்தனர். இந்த முதல் வாய்ப்பானது கயிலாயநாதன் நமக்கு முதலில் காட்சிதரக் கொடுத்த பெருங்கருணையே என்று சொல்ல வேண்டும். நம்முடன் வந்த வேறு மாநிலத்தினரின் மதுவருந்தல் புகைத்தல் போன்ற செயல்களால் நமக்குச் சிறு அருவருப்பு இருந்து வந்து. இங்ஙனம் இருபிரிவாகப் பிரியச்செய்து நமக்குத் தெய்வீக நெறியில் தனித்துத் தரிசனம் தரும் பொருட்டுக் கயிலாயநாதன் அருள் பாலித்தான்.
      சீனடிரக்கில் மூட்டைமுடிச்சுகளுடன் 22 பேர் ஏறிக் கொண்டரன். அதற்குமேல் ஏறமுடியாது. ஆகவே மற்ற மூவர்க்காக ஜீப் ஒன்று அமைத்துக் கொண்டு அதில் நாம் சென்றோம். டிரக்கும் ஜீப்பும் மலைப்பாதையில் விரைந்தன. பாதை செம்மையில்லமல் கல்லும் கரடுமாக இருந்தது. இதில் 40 கிலோ மீட்டருக்கு மேல்பட்ட வேகத்தில் டிரக்கும் ஜீப்பும் ஓடின. அத்துணைவேகத்தில் சென்றால் தான் ஓட முடியுமாம். வேகம் குறைந்தால் கற்களில் தடைபட்டு நின்று விடுமாம். டிரக்கில் ஏற்றிய சாமான்களின் நெருக்கடியால் யாத்திரீகர்கள் வருந்தினர். சைனர் ஏற்றிய சில சாமன்களின் கொடிய நாற்றமும் தோற்றமும் பெரிதும் அருவருப்பை ஊட்டின. டிரக்கின் வேகத்தால் ஆட்டமும் குலுக்கலும் தாளமுடியாமல் பலர் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டனர். சிலர் காயமுற்றனர். இந்த டிரக்கில் பிரயாணம் செய்தவர்க்கு இனிமேல் யமவாதனையே இல்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது. இத்துணை வேதனையையும்கயிலையைக் காணப்போகிறோம்என்ற நினைப்பில் அவர்கள் மறந்து வந்தனர்.
      இவ்வண்ணம் 60 கி.மீ. சென்றதும் திரிகூடமலையும் ராக்ஷஸ தடாகமும் வந்தன. அங்கே இறங்கினோம். ராக்ஷஸ தடாகக் கரையிலிருந்து [50 கி.மீ. தொலைவுக்கு அப்பால்] கயிலைச் சிகரத்தின் தரிசனம் முதன்முதலாக நமக்குக் கிடைத்தது. அன்று நாம் மெளனமாகையால் அருகிலிருந்தவர்களைக் கைதட்டி அழைத்துக் கயிலையைச் சுட்டிக் காட்டினோம். கயிலைச் சிகரத்தைத் தரிசித்து அடியற்றமரம் போல் நிலத்தில் வீழ்ந்து வணங்கினர். கயிலைக் காட்சியைக் கண்டவுடன் நம்மை நாம் மறந்தோம். உள்ளம் குளிர்ந்தது.  உரோமம் சிலிர்த்தது. கண்ணும் பொழி மழை பெய்தது. கையும் தாமே புனை அஞ்சலியதாய் உயர்ந்தன. மெய்யும் தரைமிசை விழுமுன்பு எழுந்தது. அவ்வனுபவத்தை மேலும் உரையால் கூற இயலாது. ‘இங்ஙன் இருந்ததென்று எவ்வண்ணம் சொல்லுகேன், அங்ஙன் இருந்ததென்று உந்தீபற, அறியும் அறிவதன்று உந்தீபறஎன்ற அருள் அனுபவத்தையே கூற இயலுகிறது.
      மீண்டும் டிரக்கும் ஜீப்பும் புறப்பட்டன. 20 கி.மீ. சென்றதும் காலை 10:00க்கு [சீன நேரம் 12:30 மணிக்கு] மானஸசரோவரத்தில் உள்ள செய்த்தி மேம்பை அடைந்தோம். மானஸசரோவரத்தில் நீராடி மகிழ்ந்தோம். வழிபாடு செய்தோம்.
      மீண்டும் டிரக்கும் ஜீப்பும் புறப்பட்டன. 30 கி.மீ சென்றதும் காலை 11:30 மணிக்குக் கைலையின் அடிவாரத்தில் உள்ள டார்ச்சென் கேம்பை அடைந்தோம். இது கயிலையின் தெற்குப்புறத்தில் உள்ளது. இங்கே கயிலையின் தெற்குமுக தரிசனம் மிகவும் நன்றாகக் கிடைத்தது. மப்புமந்தாரம் எதுவும் இன்றி மிகத்தெளிவாகக் கயிலைநாதன் காட்சி அளித்தான்.
      16-7-1982 வெள்ளியன்று காலை 6 மணிக்குக் கயிலையின் தெற்குமுக தரிசனம் செய்து கொண்டோம். அந்த மகிழ்ச்சியோடு நாமும் நம்மவர் பதின்மரும் டார்ச்சேன் கேம்பிலிருந்து கயிலைப்பரிக்கிரமம் செய்யத் தொடங்கினோம். பரிக்கிரமம் என்பது வலம் வருதலாகும். கயிலைப் பரிக்கிரமம் செய்ய 48 கி.மீ. நடக்க வேண்டும். இதனை இரண்டு நாளில் முடிக்க வேண்டும். இதற்கிடையில் ஓரிடத்தில் தங்க வேண்டும்.
      திபேத்தில் வாழும் மக்கள் திருக்கயிலைமலையைப் பன்முறை பரிக்கிறமம் செய்கிறார்கள். தொடங்கும் இடத்தில்  கீழே வீழ்ந்து நமஸ்காரம் செய்கிறார்கள் கையும் காலும் பட்ட இடங்களில் கோடிட்டுக் கொள்கிறார்கள். பிறகு எழுந்து, கால்வைத்த கோட்டிலிருந்து கைவைத்த கோடு வரை அடிமேல் அடிவைத்து நடக்கிறார்கள் கைவைத்த கோடு வந்ததும் அக்கோட்டில் கால்வைத்து நமஸ்காரம் செய்கிறார்கள். கைவைத்த இடத்தில் முன்போலவே கோடிட்டுக் கொண்டு எழுந்து நடக்கிறார்கள். இப்படியே பரிக்கிரமம் செய்து முடிக்க அவர்களுக்குப் பல நாளாகும். இந்த நாட்களுக்காக அவர்கள் ஆகாரம் கொண்டு செல்வதில்லை. வழியில் யாராவது உணவுகொடுத்தால் உண்கிறார்கள். இல்லையேல் பட்டினியாகாவே வலம் வருகிறார்கள்.
      நாமும் நம் குழுவைச்சார்ந்த 10 பேரும் சாதாரண முறையில் நடந்து பரிக்கிரமத்தைத் தொடங்கினோம். தெற்குப் பகுதிக்கு வந்தோம். இங்கே கயிலைமலை 590 அடி உயரத்துக்குச் செங்குத்தாக மதில்போல் அமைந்திருக்கிறது. நம் நாட்டுத் திருக்கோயில் அமைப்புக்கள், ஓரளவு சிற்ப அமைப்பு யாவும் கயிலை மலையின் சுவர்ப்பகுதியில் இயற்கையாக அமைந்துள்ளன.
      இராசசிம்மபல்லவன் காஞ்சிபுரத்தில் கைலாச நாதர் கோயிலைக் கட்டும்போது கயிலை சென்று அங்குள்ள அமைப்புக்களைக் கண்டு அமைத்தான் என்று சொல்லப்படுகிறது. கயிலையின் மேற்குமுகத்தின் தரிசனம் செய்துகொண்டு, வடமேற்கில் அமைந்திருந்த டேராபுக் என்ற கேம்பில் அன்று இரவு தங்கினோம். அன்றிரவு சிறிது மழைத்தூரல் இருந்தது. கடும் குளிராகவும் இருந்தது. இரவில் கயிலாயப் பதிகங்கள் ஓதினோம், 17-7-1982 சனிக்கிழமை அதிகாலை கூடாரத்திலிருந்து வெளியில் வந்தபோது ஆங்காங்கே குழிகளில் தேங்கிய தண்ணீரின் மேல் பனிப்பாலங்கள் கண்ணாடிபோல படிந்திருந்த்தைத் கண்டோம். பின்பு வடபகுதியில் பரிக்கிரமத்தைத் தொடர்ந்தோம்.
      வடகிழக்குப்பகுதியில் மிகப்பெரிய ஏற்றம் வருகிறது. இந்த இடம் தோல்மாபாஸ் என்று கூறப்படுகிறது. இங்கே வடகிழக்கு முகதெரிசனம் செய்தோம். தோல்மாபாஸின் இறக்கத்தில் கெளரி குண்டம் என்ற தடாகம் இருக்கிறது. இங்கே செல்வதற்குச் சரியான பாதை இல்லை இருப்பினும் நாம்கீழே இறங்கிச் சென்று கெளரி தடாகத்தில் நீராடினோம். பிறகுமேலே ஏறிப் பரிக்கிரமத்தைத் தொடர்ந்தோம். சிறிது தொலைவு சென்றதும் ஒரு சிறிய குகையைக் கண்டோம். குகைக்கு தண்ணீர் தேங்கி இருந்தது அப்போது அவ்விடம் பரிக்கிரமம் செய்து கொண்டு வந்த லாமா ஒருவர் அத்தீர்த்ததைக் “கயிலைதீர்த்தம்” என்று சொல்லி தெளித்துக் கொள்ளும்படி சைகை காட்டினார்.
      கிழக்குப் பகுதியில் பரிக்கிரமம் செய்யும் போது கிழக்கு முகத் தரிசனம் செய்தோம். பிறகு இரவு 7 மணிக்குத் தெற்குப் பகுதியில் உள்ள டார்ச்சேன் மேம்பிற்கு நாம் வந்து சேர்ந்தோம். நம்முடன் வந்தவர்கள் பின்தங்கி நடந்த படியால் ஒவ்வொருவராக இரவு 12 மணிவரை கேம்பிற்கு வந்தார்கள்.
      18-7-1982 ஞாயிறன்று காலை டார்ச்சேன் கேம்பிலிருந்து நரோபுஞ்ச என்ற சிகரத்திற்கு ஏறிச் சென்றோம். அன்றைக்குப் பிரதோஷம். நரோபுஞ்சிலிருந்து கயிலை தரிசனம் மிகமிக நன்றாகாக் கிடைத்தது. அவ்விடம் 11 சாளக்கிராமக்கற்களைப் பிரதிஷ்டைசெய்து நாம் கற்பூரதீபாராதனை செய்தோம். கற்பூரம் அருகில் இருந்த ஒரு செடிமேல் தற்செயலாகப் பட்டபோது அந்தப் பச்சைக் செடி பற்றி எரிந்தது. அப்போது உமாபதி சிவாசாரியார் முள்ளிச் செடிக்கு முத்தி கொடுத்தது நினைவுக்கு வந்தது. இது நமக்கு பெரிய வியப்பாக இருந்தது. பிறகு விசாரித்த போது அத்தகைய செடி பச்சையாகவே எரியும் இயல்புடையது என்பது தெரிய வந்தது. வழிபாடு முடிந்தபின்பு நாரோபுஞ்சிலிருந்து டார்ச்சேன் கேம்பிற்குத் திரும்பி இரவு அங்கே தங்கினோம்.
      19-7-01982 திங்களன்று காலை வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. இதனால் டார்ச்சேன் கேம்பிலிருந்து கயிலைக்காட்சி கிடைக்கவில்லை. அதனால் மனத்தில் சிறிது தயக்கம் ஏற்பட்டது. திருநாவுக்கரசிரம் திருவையாற்றில் வருக என்று கூறி இறைவன் மறைந்தாற் போல நமக்கும் விண்ணிலே மறைந்து அருள்புரிபவனாக ஆகிவிட்டான் போலும்! பிறகு டார்ச்சேன் கேம்பிலிருந்து கிளம்பி டிரக்கிலும் ஜீப்பிலும் பயணம் செய்து பகல் 1 மணிக்கு மானஸசரோவரத்தில் உள்ள செய்த்தி கேம்புக்கு வந்து சேர்ந்தோம். மானஸசரோவரத்தில் மனங்குளிர நீராடினோம். அன்று இரவு செய்த்தியில் தங்கினோம்.
      20-7-1982 செவ்வாயன்று ஆடி அமாவாசை அதிகாலையில் மானஸசரோவத்தில் அனைவரும் நீராடினோம். மானஸசரோவரம் பெரிய ஏரி 88 கி.மீ. சுற்றளவு உடையது. சுமார் 250 அடி ஆழமுடையது. இது கயிலைமலைக்குத் தென்புறத்தில் 30 கி.மீ. தொலைவில் இருக்கிறது. கயிலைமலை சிவபெருமானின் திருவுருவாகவும் மானஸசரோவரம் உமாதேவியின் திருவுருவாகவும் கருதி வழிபடப் பெறுகிறது. தூரப் பார்வைக்குத் தண்ணீர் உமையாள் போலப் பசுமையாகத் தெரிகிறது. கையில் அள்ளினால் நிறம் ஏதும் இன்றிப் பளிங்கு போல் இருக்கிறது. தண்ணீரில் பனிப் பாறைகள் மிதக்கின்றன. தண்ணீரின் அடியில் பசுமை, பொன்மை, வெண்மை, நீலம் முதலிய பல்வேறு வண்ணக் கற்கள் கிடைக்கின்றன. நீராடும்போது நம்முடன் வந்தவர்களில் சிலர் சிறுபிள்ளைகளைப் போல அக்கற்களில் சிலவற்றை எடுத்து வந்தார்கள். கயிலை மலையைப் பரிக்கிரமம் செய்வது போல மானஸசரோவரத்தையும் பரிக்கிரமம் செய்வது வழக்கம்.
      அன்று இரவு மானஸசரோவரத்தில் உள்ள செய்த்தி கேம்பில் தங்கினோம். மாலை 6 முதல் 9 மணி வரை சத் விஷயங்களை பற்றிச் சிந்தனை செய்தோம். திருநாவுக்கரசு சுவாமிகள் கயிலாயக் காட்சி கண்ட நாளாகையால் அவர்தம் வரலாறு குறித்துக் காஞ்சி ஆதீனகர்த்தர் அவர்களும் பேரூர் சுவாமிகளும் விரிவாகப் பேசினார்கள்.
      21-7-1982 புதனன்றும் மானஸசரோவரத்தில் நீராடினோம். இரவு அங்கே தங்கினோம். 22-7-1982 வியாழனன்று பகல் 2 மணிக்குச் செய்த்தி கேம்பிலிருந்து டிரக் புறப்பட்டது. நாம் ஜீப்பில் சென்றோம். மாலை 6 மணிக்குத் தக்ளகோட் வந்து சேர்ந்தது. இரவு அங்கே தங்கினோம்.
      23-7-1982 வெள்ளியன்று தக்ளகோட்டில் சீனமுகாமில் சங்கப் பரிசோதனை நடைபெற்றது. பகல் 2 மணிக்குச் சாமான் மூட்டைகள் குதிரை மேல் ஏற்றப்பட்டு அவை முன்னதாக அனுப்பப் பெற்றன. இரவு 2 மணிக்கு நாமும் மற்றவர்களும் குதிரையில் பயணம் தொடங்கினோம். கடுமையான இருளில் குதிரைகள் பழக்கத்தால் ஒருவாறு வழி தெரிந்து நடந்தன. இருளும் வழியின் அச்சமும் மனத்தை உருத்தின. கயிலைநாதன் திருவருள் தான் துணை வந்து காத்தது என்று சொல்ல வேண்டும். குதிரையிலிருந்து சிலர் வழுக்கி விழுந்ததும் உண்டு. ஒருவாறு சமாளித்து மீண்டும் குதிரையில் ஏறிப் பயணம் தொடர்ந்தனர்.
      24-7-1982 சனியன்று காலை 10:30 இந்திய எல்லையான லிப்புபாஸ் என்ற இடத்தை அடைந்தோம். அங்கே சிறிது மழைத்தூறல் இருந்தது. நான்காவது குழுவினர் இந்தப் பகுதியில் எதிர்கொண்டு ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிய வண்ணம் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்க “கயிலை மலையானுக்கு ஜே! கயிலை மலையானுக்கு ஜே!” என்ற பக்திக் கோஷங்கள் எழுப்பினர். பகல் 1 மணிக்கு நாபிடாங் என்ற இடத்தை அடைந்து பகல் உணவு அருந்தினோம். அங்கிருந்து கிளம்பி மாலை 5 மணிக்கு காலாபாணியை அடைந்து இரவு அங்கே தங்கினோம்.
      25-7-1982 ஞாயிறன்று காலை 9 மணிக்குப் புறப்பட்டு பகல் 2 மணிக்குக் குஞ்ஜி என்ற இடத்தை அடைந்தோம். இங்கே தண்ணீர் கிடைப்பது அரிதாயிருந்தது. குஞ்ஜிக்கு 40 கி.மீ. தொலைவில் சிறுகயிலாயம் (மினி கைலாஸ்) இருக்கிறது. இங்கே ஆண்டு தோறும் மேளா என்ற விழா நடைபெறும் என்று கூறுகிறார்கள். அன்றிரவு குஞ்ஜியில் தங்கினோம். 26-7-1982 திங்களன்று காலை 8 மணிக்குப் புறப்பட்டு மாலை 4 மணிக்குப் புத்தி என்ற இடத்தை அடைந்து இரவு அங்கே தங்கினோம்.
      27-7-1982 செவ்வாயன்று காலை 8 மணிக்குக்கிளம்பி 9 கி.மீ. நடந்து பகல் 1 மணிக்கு மால்பா என்ற இடத்தை அடைந்தோம். வழிமிகவும் இறக்கமாக இருந்தது. இரவு மால்பாவில் தங்கினோம். யாத்திரையில் ஒவ்வொரு இடத்திலும் ஈயின் தொல்லை உண்டு. மால்பாவில் ஈயின் தொல்லை மிகவும் அதிகமாக இருந்தது.
      28-7-1982 புதனன்று காலை மால்பாவில் புறப்பட்டு 9 கி.மீ. நடந்து ஜிப்தி என்ற இடத்தை அடைந்தோம். வழிஏற்றமாகவும் மண்சரிவு நேரும் அபாயமுடையதாகவும் இருந்தது. ஜிப்தியில் அன்றிரவு தங்கினோம். இங்கே இந்திய இராணுவ வீரர்கள் பலர் தமிழ் நாட்டவராக இருந்தார்கள். அவர்கள் நம்மவர்களுடன் தமிழில் பேசுகிறார்கள். இதுவரை தமிழ் பேசுவோரைக் காணாதிருந்த ஆதங்கம் இங்கே விலகியது. மனத்திற்கு உற்சாகமும் ஏற்பட்டது.
      29-7-1982 வியாழனன்று காலை ஜிப்தியில் புறப்பட்டுக் சிர்க்கா வந்து சேர்ந்து பகல் உணவு அருந்தினோம். சிர்க்காவிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள நாராயண ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தோம். ஆசிரமத்தார் நம்முடன் வந்தவர்களுக்குத் தென்னிந்திய உணவாகச் சிறத விருந்து அளித்தார்கள். ஆசிரமத்திற்கு நாம் நன்கொடை வழங்கினோம். வந்தவர்களில் சிலரும் ஆசிரம வளர்ச்சிக்காக நன்கொடை வழங்கினார்கள். அன்றிரவு ஆசிரமத்தில் தங்கி இருந்தோம்.
      30-7-1982 வெள்ளியன்று காலை 7 மணிக்குப் புறப்பட்டோம். பகல் 1 மணிக்குத் தவாகாட் வந்து சேர்ந்தோம். இத்துடன் நடைப் பயணம் முடிந்து விடுகிறது. பேருந்து ஆயுத்தமாக இருந்தது. சாமான்கள் நிறையிடப்பட்டுப் பேருந்தில் ஏற்றப்பட்டன. அனைவரும் பேருந்தில் ஏறினோம். பேருந்து புறப்பட்டது. டார்ச்சூலா வந்ததும் பகல் உணவு அருந்தினோம். மீண்டும் மாலை 4 மணிக்குப் பேருந்து புறப்பட்டது. பெட்ராகாட் என்ற இடத்தை அடைந்து இரவு அங்கே தங்கினோம். 31-7-1982 சனியன்று காலை பெட்ராகாட்டிலிருந்து பேருந்து கிளம்பியது. வழியில் சம்பாவதில் காலை உணவும் ருத்திரபூரில் பகல் உணவும் அருந்தினோம். இரவு 10:15க்குத் தில்லி வந்து சேர்ந்தோம். தில்லித் தமிழ்ச்சங்கத்தில் தங்கினோம். 1-8-1982 ஞாயிறன்று தில்லித் தமிழ்ச்சங்கத்தார் பெரியதொரு வரவேற்பளித்தார்கள். நாமும், காஞ்சிபுரம் சந்நிதானம் அவர்களும் பேரூர் அடிகளார் அவர்களும் யாத்திரையைப் பற்றி விரிவுரையாற்றினோம்.
      தருமையாதீனம் ஶ்ரீலஶ்ரீ கயிலைக் குருமகாசன்னிதானம் அவர்கள் கயிலாய யாத்திரை நிறைவு செய்து தில்லிக்கு எழுந்தருளியபோது தமிழ்ச் சங்கக் கட்டடம் நிறைவு பெறாத நிலையிலிருந்தது. அதற்கு அவர்கள் ரூ.1000 நன்கொடை அளித்தார்கள். அந்தக் கட்டடத்திலேயே நாம் தங்கினோம். தற்போது ஆடிடோரியம் கட்டவிருப்பதறிந்து நாமும் ரூ,1008 நன்கொடை அளித்தோம். அன்றியும் தில்லித் தமிழ்ச் சங்கத்தார் கேட்டுக்கொண்டபடி ஆண்டுதோறும் தமிழ்ச் சங்கத்தில் சைவச் சொற்பொழிவாற்ற அறக்கட்டளை அமைப்பதாகச் சொற்பொழிகள் போது உறுதியளித்தோம். அன்று இரவு உத்தரசுவாமிமலையில் அபிஷேக ஆராதனைகளை நாம் நடத்தி வைத்தோம்.
      பகல் 1_45 மணிக்குத் தில்லியிலிருந்து காசிக்கு ரயில் பயணம் தொடங்கியது. 3-8-1982 செவ்வாயன்று காலை 6:45 மணிக்குக் காசியை அடைந்தோம். அன்று ஆடிப்பதினெட்டாம் பெருக்கு. அனைவரும் கங்கை நீராடினோம். கேதார நாதர் விசுவநாதர் தரிசனம் செய்தோம். காஞ்சீபுரம் குருமகாசந்நிதானம் அவர்களும், பேரூர் தவத்திரு அடிகளார் அவர்களும் நம்முடன் நமது திருமடத்தில் எழுந்தருளி இருந்தார்கள். 4-8-1982 புதனன்று காசி விசுவநாத ருக்கும் 5-8-1982 வியாழனன்று அன்னபூரணிக்கும் விசேஷ ஆராதனைகள் நடத்தப்பெற்றன. 6-8-1982 வெள்ளியன்று நம் மடாலயத்தில் சாதுக்களுக்குப் பண்டாராவும் கேதாரீச்வரருக்கு அபிஷேக ஆராதனையும் 7-8-1982 சனியன்று சங்கடா தேவிக்கு ஆராதனையும் 8-8-1982 ஞாயிறன்று 200 பேருக்குப் பிராம்மணபோஜனமும் நடத்தப்பெற்றன. 9-8-1982 திங்களன்று கேதாரீச்வரர்க்கு விசேஷ ஆராதனையும் காலபைரவருக்கு விசேஷ ஆராதனையும் செய்விக்கலாயிற்று. 10-8-1982 செவ்வாயன்று காலை 5:15க்குக் காசியிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டோம்.
      11-8-1982 புதனன்று இரவு 10 மணிக்குச் சென்னைப் புகை வண்டி நிலையம் சேர்ந்தோம். அப்போது திருநள்ளாறு கட்டளைத் தம்பிரான், டாக்டர் பி. நடராஜன், திரு கீ. இராமலிங்க முதலியார், திரு. பக்தவத்சல முதலியார், திரு ஆறுமுக முதலியார், திரு. க. சுப்பிரமணிய அய்யர், சிதம்ப்ரம் திரு. பாலசுப்பிரமணிய செட்டியார், திருச்சி திரு. வெங்கடாசலம் செட்டியார், திரு. மூக்கப் பிள்ளை, திரு. தாமோதரம் முதலியார், மற்றும் சைவ மெய் அன்பர்கள் சைவ சித்தாந்தப் பேரவையினர் முதலானோர் பெருந்திரளாக வந்திருந்து பேரன்புடன் நம்மை வரவேற்றார்கள்.
      பிறகு தருமை ஆதீனம் பிரசார நிலையத்திற்குச் சென்றோம். திருநள்ளாறு கட்டளைத்தம்பிரான் தருமை ஆதீனச்சார்பில் வரவேற்று நமக்கும் காஞ்சி சுவாமிகளுக்கும் பொன்னாடை போர்த்தினார்கள். சென்னை பக்தவத்சல முதலியார் அவர்கள் நமக்கும் காஞ்சி சுவாமிகள் அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தினார். திரு. க. சுப்பிரமணிய ஐயர் ஆறுமுக முதலியார் ஆகிய இருவரும் வரவேற்பு வாசித்தளித்தனர். நூற்றுக்கணக்கான அன்பர்களுக்குக் கயிலைப் பிரசாதம் வழங்கப் பெற்றது.
      12-8-1982 வியாழனன்று காஞ்சிபுரம் சந்நிதானம் அவர்களும் நாமும் காஞ்சிபுரம் சென்றோம். அங்கே மடாலயத்தில் பெரிய வரவேற்பு நடந்தது. பிறகு ஏகாம்பரநாதர் கோயில், கயிலாயநாதர் கோவில் முதலிய பல கோயில்களிலும் வழிபாடு செய்யலாயிற்று. சென்னை திரும்பினோம்.
      13-8-1982 வெள்ளியன்று சென்னைக் கபாலீச்வரர் கோயில், மாங்காட்டுக் கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில்களில் வழிபாடு நடத்தலாயிற்று. 14-8-1982 சனியன்று தருமையாதீன பிரசாரநிலையத்தில் சென்னை அன்பர்கள் பலரும் கூடிப் பெரியதொரு வரவேற்பளித்தார்கள்.
      15-8-1982 ஞாயிறன்று விடியல் 4 மணிக்குச் சென்னையில் புறப்பட்டு காலை 10 மணிக்கு பனசையை அடைந்தோம். ஶ்ரீ காசிமடத்துச் சிப்பந்திகளும், நம் கல்லூரிப் பேராசிரியர்களும், உள்ளூர் வெளியூர்ப் பிரமுகர்களும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கூடிப் பெரிய வரவேற்பளித்துத் தத்தம் வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டார்கள். நம்மைக் காண வந்தவர்களின் ஆர்வம் கரைபுரண்டோடியது. அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நண்பகலில் அன்பர்கள் அனைவருக்கும் நம் மடாலயத்தில் விருந்தளிக்கப்பெற்றது.
      எல்லோருக்கும் கயிலாய நாதனின் திருவருள் உண்டாவதாகுக.
-    சிவ சிவ
சிவம்
திருக்கயிலைப் புனிதப்பயணம் பற்றிய சில விசேடக் குறிப்புகள்
யாத்திரை என்பது அனைத்து நிலையிலுள்ள மானிடர்க்கும் இன்றியமையாத ஒரு நிகழ்ச்சியாக வலியுறுத்தப் பெறுகிறது. துறவு நிலையிலுள்ளார்க்கும் இது பொருந்திய ஒன்றாகக் கூறப்படுவதும் இதனாலேயாகும். இருந்துழியிருந்து இறைமையைக் காணுதல் ஒல்லுவதே; ஆயினும் பல்வேறு வகைப்பட்ட இயற்கைச் சூழலில், வடிவத்தில், அமைப்பில் கண்டு தொழுகையில் கனிவுறுகின்ற உள்ளத்தின் குழைவைக் காணமுடிகின்றது.
யாத்திரை மேற்கொள்கையில் ஒருமித்த குழுவுணர்வு ஏற்படுகின்றது. அங்கு மத, இன, நிற வேறுபாடுகளுக்கிடமில்லை ‘அனைவரும் சமம்’ எனும் உணர்வு மேலோங்குகிறது. சகித்துக் கொண்டு ஒத்துப்போகும் உணர்வில்லாரும் ஒருங்கமைத்து விடுவதைப் பயணத்தில் காண்கின்றோம்.
பயணம் மேற்கொள்கையில், இறையன்பு, திருவருட் பாடல்கள் ஓதல் போன்ற பக்தி மேலீடன்றிப் பிற எண்ணங்கள் தலைகாட்டுவதில்லை. அதனால் ஏகாக்கிரக சிந்தனை வயப்படுகிறோம். குறிப்பாக பிற யாத்திரைகளின் வேறாக இப்பயணத்தில் எந்நேரமும் இறைமையுணர்விலேயே தோய்கின்றோம்.
பயணம் செய்கையில் கடுமையான உடலுழைப்பு தேவைப்படுவதால் ஆரோக்கியமான உடல் அமைய வழியாகிறது. உடல் நலம் சிறிதும் பாதிக்கப்படுவதில்லை. இயற்கையிலேயே மாற்றுச் சக்திகள் கலந்துள்ளதால் நோய் அண்மி வராது.
வழிபாட்டு நெறியில் உருவம், அருவம், அருவுருவம் எனும் மூன்று நிலைகள் உண்டு; விநாயகர் முருகன் முதலானவை உருவத்திருமேனிகள், லிங்கம் அருவுருவத்திருமேனி, அகத்தில் கண்கொண்டு பாதர்க்கும் ஆனந்தத்தில் எய்துவதே அருவக்காட்சி அது அனைவருக்கும் கிட்டாது; இயற்கையாக அமைந்துள்ள கிரியில், பூத்த பவளப் பொருப்பொன்று வெள்ளிவெற்பில் வாய்த்த வடிவை அகத்தில் கண்டு அளப்பரும் ஆனந்தம் எய்துகின்றோம். மற்றத் திசைகளில், தொடர்பான மலைச்சிகரங்கள் இருக்க, தெற்கு முகத்தில் மட்டும் சன்னதி போன்ற அமைப்பும். படிக்கட்டுகள் ஒத்த அடுக்குகளும், அதன் எதிரில் மானஸசரோவர் தீர்த்தமும் உள்ளமை இறைவன் கயிலைங்கிரியிலிருந்து தென்னாடு போந்து திருவருள் நல்கியமை நிறுவுவதாக அமைகிறது. கிரியின் தோற்றத்தில் உள்ளத்தைப் பறிகொடுத்து, எண்ணிய திருக்காட்சிகள் எதிரில் தோன்ற இன்பமெய்துகிறோம். கிரியும், இடப்பக்கம் உள்ள கெளரிகுண்டமும் அம்மையப்பர் திருக்கோலத்தை எதிர்கொணர்கின்றன. ஆனந்த மேலீட்டில் திளைக்கின்றோம்.
-    சிவ சிவ
காவாய் கனகத்திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி! போற்றி!!
சிவம்
திருமலைச் சிறப்பு
                பொன்னின் வெண்திரு நீறு புனைந்தெனப்
      பன்னும் நீள்பனி மால்வரைப் பாலது
      தன்னை யார்க்கும் அறிவரி யானென்றும்
       மன்னி வாழ்கயி லைத்திரு மாமலை.

      அண்ணல் வீற்றிருக் கப்பெற்ற தாதலின்
      நண்ணும் மூன்றுல குந்நான் மறைகளும்
      எண்ணில் மாதவஞ் செய்ய்வந் தெய்திய
      புண்ணிய யந்திரண் டுள்ளது போல்வது.
-    சேக்கிழார்: பெரியபுராணம்
வரங் டந்தரு ளெனமுது வானவர் முனிவோர்
கரங்க டந்தலை முகிழ்த்திடக் கருணைசெய் தவிச்சை
உரங்க டந்துரை உணர்வெலாங் கடந்தரு மறையின்
சிரங்க டந்தவன் இருப்பது திருக்கயிலாயம்.

-    பரஞ்சோதி முனிவர்: திருவிளையாடல் புராணம்.    

Thursday, October 27, 2016

அன்பே சிவம்
மயிலை முருகன் காவடிச் சிந்து
இயற்றியவர்:
பைந்தமிழ்ப் பாவலவர், புலவர்ஏறு, மணிதீபம்,
சிவகதாப்ரசனகச் சக்கரவர்த்தி,
கே. ஆர். நாகராஜன்

சிவஞான பூஜா மலர் துன்மதி ஆண்டு - (1981)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]

காப்பு
      திருவார் மயிலைநகர் வாழும்உயர்
            தெய்வக் கபாலி அருள் சூழும்தமிழ்
            ஓசை முழங்க, நடம் ஆசையுடனே செய்யும்
            யானைபருகும், தமிழ்த்தேனை!

நூல்

      தெள்ளு தமிழ் விரும்பும் சீலன்தமிழ்
            நாகன் எனும் பெயர்கொள் நூலன்உயர்
            மயிலை நகரில் வளர் முருகன் திருப்புகழைச்
            சொல்வேன்! அனைவரையும்வெல்வேன்!               1

      ஓசைக் கடல் முழுங்கும் முன்றில்தினம்
            உண்மை அடியவர்கள் மன்றில்உனைப்
            பாடிப் பரவிடுவார்! ஆடி மகிழ்ந்திடுவார்!
            முருகா! திருமால்மருகா!                             2

      அழகு மயிலதன் மேல் ஏறிஇரு
            அழகியர் அன்பதனைக் கோரிக்கையில்
            வேலை எடுத்துவிளை யாடிவரும் முருகக்
            கோனே! தமிழ்த்தேனே!                               3

      அற்புத மாமயிலை வாழும்ஒரு
            கற்பக வல்லி மடி வீழும்நல்ல
            சின்னஞ் சிறுமுருகன் என்னெஞ் சுருக்கிடுவான்
                  நாளும்! எந்தநாளும்!                           4

      தந்தை கபாலி உளம் மகிழஅன்னை
            கற்பக வல்லி அன்பு திகழவளர்
      செல்வத் திருமுருகன் சிந்தை நிறைந்திருப்பான்
            என்றும்! – தினம்நன்றும்!                              5

      தொந்தி கரைத்திடவே அண்ணன்தினம்
            தொந்தோம் என்றாடிடுவான் திண்ணம்! – அவன்
      தம்பி திருமுருகன் நம்பியவர்க் கருளும்
            அன்பன்! – தமிழ்ப்பண்பன்!                            6

      மயிலை ஊர்திஎனக் கொண்டான்! – திரு
            மயிலைத் தன்ஊர் எனவே கண்டான்! – இரு
      மயிலை மணந்தவனும் அயிலை எடுத்து, தினம்
            வருவான்! – இன்பம்தருவான்!                         7

      செக்கச் சிவந்திருப்பான் மேனி! அவன்
            செய்ய அடிமலரின் தேனைத்தினம்
      வந்தே குடித்து மகிழ் செந்தேன் கலிபொழியும்
            தேனீ! தான் தமிழ்த்தேனீ!                             8

      வள்ளல் பெருங்கருணை வேலன்! அவன்
            வந்தவர்க் கெல்லாம் அருளும் சீவன்! – என்றன்
      உள்ளமெனும் தாமரையில் அள்ளும் அழகுடனே
            இருப்பான்! தினம்சிரிப்பான்!                           9

      புன்னை மரத்தின் அடிமேடைஅது
            பெம்மான் அருள் பெருகும் ஓடைஅங்கு
      அன்னை தவம் புரிவான்! அழகன் அருள் புரிவான்!
            தினமும்! – மகிழும் என்மனமும்!                      10

மயிலை நகரின் சிறப்பு

      நீலக் கடல்முழங்கும் நாளும்! – அதன்
            நீண்ட கரையினில் செவ் வேளும்தினம்
      வணங்கிடும் அன்பர்தமக் கிணங்கியே இன்னருளைத்
            தருவான்! – மயில்மேல்வருவான்!                     11

      வள்ளுவனார் வாழ்ந்திருந்த மயிலைமுருக
            வள்ளல் உவந் தேறிவரும் மயிலைத்தினம்
      கண்டே நடுக்கமது கொண்டே அரவமெலாம்
            ஏங்கும்! சிவன் மேல்தூங்கும்!                         12

      எலும்பை அணிந்தவர்தம் முன்னால்ஐயன்
            எலும்பைப் பெண்ணாகச் செய்தார் தன்னால்! – திரு
      ஞானசம்பந்தப் பெயர் தானே முறையாய்க் கொண்ட
            அன்பர்! – தமிழ்ப்பண்பர்!                              13

      செல்வம் சிறந்தோங்கும் மயிலைகல்விச்
            செல்வம் உயர்ந்தோங்கும் மயிலைஉயர்
      விண்ணை முட்டும் மாளிகைகள் கண்ணைக்கவர் காட்சி தரும்
            அன்றும்! – முறையாய்இன்றும்!                        14

      தந்தை கபாலி அருள்புரிவான்! உயர்
            தாயாரும் முந்தி அருள் புரிவான்! – உயர்
      தொந்தி கணபதியும், கந்தக் குணபதியும்
            வருவார்! – அருள்தருவார்!                            15

      பண்டை நாள் பல்லவர்கள் காலம்! – மயிலை
            பாரில் சிறந்திருந்த கோலம்! – பல
      மேலைப் புலத்திருந்தும், கீழைப் புலத்திருந்தும்கலம்கள்
            வருமே! செல்வம்தருமே!                             16

      வாயிலார் எனும்பெயர்கொள் அன்பர்! – அவர்
            வள்ளல் கபாலியிடம் அன்பர்! – அவர்
      தோன்றியநற் காரணத்தால் ஆன்றபுகழ் பெற்றதுநல்
            மயிலை! – சீர்மயிலை!                               17

      அழகு மயில்வடிவம் கொண்டேஉமை
            அம்மை, இறைவர்உருக் கண்டேமுன்னாள்
      புன்னை மரத்தடியில் அன்னை வணங்கியசீர்
            மயிலை! – உயர்மயிலை!                             18

      நாயன்மார் அறுபத்துமூவர்! – அவர்க்கே
            அவனியில் நிகர் உளார் யாவர்? – அவர்தாம்
      ஆண்டுதோறும் தெருவில் யாண்டும் உலாவகுவார்
            அன்றும்! – இனிஎன்றும்!                              19

      அன்னை அறம் புரியும் மயிலை! – எங்கள்
            அப்பன் அருள் புரியும் மயிலை! – உயர்
      முருகப் பெருமான் சக்தி வேலை தாய் தன்னிடமே
            பெற்றான்! – பகையைச்செற்றான்!                      20

முருகவேள் மாண்பு

      ஆறு தலையுடைய அழகன்! – அன்பர்க்
            காறுதலை வழங்கும் குழகன்! – அவன்
      பன்னிரு கையதனால் பகையை ஒழித்திடுவான்
            வேலன்! – சிவ – பாலன்!                                21

      கற்பக வல்லி மகிழ் வேலன்! – கல்வி
            கற்றவர் உளத்துறையும் பாலன்! – இரு
      பாவையர்களை மணந்து, பரிவுடன் அருள்செய்யும்
            வீரன்! மயிலை – ஊரன்!                                22

      சிவனார் மனம் மகிழும் கந்தன்! – செல்வ
            மயிலை நகரில் வளர் மைந்தான்! – என்றும்
      நல்லவரைக் காத்திடுவான்! அல்லவரைத் தேய்த்திடுவான்!
            அமரன்! – தெய்வக் – குமரன்!                            23

      விண்ணைத் தொட உயரும் கோயில்! – அதில்
            கண்ணைக் கவரும் உயர் வாயில்! உள்ளே
      அழகு குடியிருக்கும் அன்பன் முகத்தில் – நகை
            இலகும்! – பகை – விலகும்!                             24

      பச்சை மயிலின் மிசை வருவான்! இரு
            பாவையர் சூழ அருள் தருவான்! – சக்தி
      வேலை வலக்கரத்தில் ஏந்திப் பகைவன் உயிர்
            கொல்வான்! – என்றும் – வெல்வான்!                     25

      புன்னை மரங்கள் நிறை சோலை! – அதன்
            முன்னை முழங்கும் கடல் வேலை! – அந்தப்
      புன்னை மரநிழலில் அன்னை அறுமுகனைக்
            கண்டாள்! – உவகை – கொண்டாள்!                       26

      அற்புதக் கபாலி உருக்கண்டு – அன்னை
            கற்பகம் மனத்தில் மகிழ் கொண்டு – முன்னர்
      பொற்புறப் பணிந்துதினம் போற்றியதால் வந்தபெயர்
            மயிலை! – நகர் – மயிலை!                              27
      வேலை வலக் கரத்தில் ஏந்தித் – தினம்
            விரும்பித் தமிழமுதம் மாந்தி – மகிழ்
      வள்ளி, தெய்வ யானையுடன் உளத்தில் மகிழ்வுடனே
            வருவான்! – வரங்கள் – தருவான்!                        28

      புள்ளிமயில் ஏறிவரும் பாலன்! – அவன்
            வள்ளிக் குறமகளின் லோலன்! – முன்பு
      சூரன் உயிர் குடித்துச் சுற்றும் பகைமுடித்த
            குமரன்! – அவன் – அமரன்!                              29

      தமிழ்க்கவித் தேன்உண்ணும் தேனீ! – தமிழ்
            நாகன் முன் காட்சிதரவாநீ! – மயிலை
      நகரில் வதியும் குமரேசப் பெருமான் புகழ்
            பாடு! – மனம் – நாடு!                                   30

      குமரன் பதமலரைப் பாடி – இரு
            குமரியர் அடிமலர் நாடித் – தினம்
      திமிரக் கடல் மயிலைக் குமரன் அருளால் ஞாலம்
            வாழ்க! – இன்பம் – சூழ்க.                                31

      கற்பகவல்லி புகழ் வாழ்க! – உயர்
            கபாலி பதமலர்கள் வாழ்க! – உயர்
      அற்புதக் குமர வடிவேலன் இரு அன்னையுடன்
            வாழ்க! – தினம் – வாழ்க!                                32